செர்டாங் – நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்து வந்து கொண்டிருக்கும் சிவப்பு அடையாள அட்டை பிரச்சனைக்கு ஒரேயடியாகத் தீர்வு காணும் விதமாக, 1957ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கும் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் பிரதமர் முன்னிலையில் அறைகூவல் விடுத்தார்.
சனிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 6) மஇகாவின் 70ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்ட விருந்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே டாக்டர் சுப்ரா இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அந்நிய நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் பலர் இங்கேயே நிரந்தரமாகத் தங்கி, சிவப்பு அடையாள அட்டைகளையும் பெற்று விடும் சூழ்நிலையில், பல தலைமுறைகளாக இந்த நாட்டில் இருக்கும் இந்திய சமுதாயத்தினரின் வாரிசுகள் பலர் 1957க்குப் பின்னர், இந்த மண்ணிலேயே பிறந்திருந்தும் அவர்கள் இன்னும் குடியுரிமை பெற முடியாத அவல நிலை நீடித்துக் கொண்டிருக்கின்றது என்றும் சுப்ரா கூறினார்.
“இந்தியர்களுக்கு குடியுரிமை – காலம் வந்து விட்டது என உணர்கின்றேன்” – நஜிப்
பின்னர் இதே விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நஜிப் துன் ரசாக், சுப்ரா விடுத்த கோரிக்கை நியாயமானது என்றும், 1957க்குப் பின் பிறந்த இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டிய தருணம் வந்து விட்டதாக தான் உணர்வதாகவும் கூறினார். விரைவில் இதுகுறித்து மற்ற அரசாங்க தரப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் நஜிப் உறுதியளித்தார்.
மஇகா 70ஆம் ஆண்டு விருந்தில் பிரதமருக்கு சிறிய வீணையை நினைவுச் சின்னமாக வழங்குகிறார் சுப்ரா. அருகில் மசீச தலைவர் லியோவ், சாமிவேலு…