Home Featured நாடு “45 கட்டுரைகளை வைத்து ஒரு திரைப்படமே எடுக்கலாம்”- விஜயராணியின் நூல் குறித்து சமுத்திரகனி பாராட்டு!

“45 கட்டுரைகளை வைத்து ஒரு திரைப்படமே எடுக்கலாம்”- விஜயராணியின் நூல் குறித்து சமுத்திரகனி பாராட்டு!

1861
0
SHARE
Ad

Vijaya8கோலாலம்பூர் – வழக்கமாக நூல் வெளியீட்டு விழா என்பது ஒரு சில தரப்பினரை மட்டுமே மகிழ்ச்சிபடுத்தும், ஆனால் பொதுமக்களோடு, இலக்கியவாதிகள், கலைஞர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் என பலத் தரப்பினரையும் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது எழுத்தாளர் விஜயராணியின் ‘அவசர உலகமா? அவரவர் உலகமா?’ நூல் வெளியீட்டு விழா.

Vijaya7கடந்த ஜூலை 27-ம் தேதி, மஇகா தலைமைச் செயலகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் மாலை 6 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில், அரங்கு முழுவதும் நிறைந்து, பலர் வாசலில் நின்று நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கும் அளவிற்கு மக்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது விழா.

ஊடகத்துறை, அரசியல், கலைத்துறை, வர்த்தகம் எனப் பல துறைகளில் திறமையும், ஆற்றலும் வாய்ந்தவரான விஜயராணி, தான் பெற்ற அனுபவங்களின் வாயிலாக இந்நூலை எழுதியிருக்கிறார். அதற்கு தக்க சான்றாக பலத்தரப்பட்ட மக்கள் கலந்து கொண்ட இவ்விழா அமைந்தது. வழக்கமான நூல் வெளியீட்டு விழா போல் அல்லாமல் சினிமா முதல் ஆன்மீகம், சமயம், சமூகச் சிந்தனை வரை அனைத்து விவகாரங்களையும் பேசும் ஒரு இலக்கிய நிகழ்ச்சியாகவே காணப்பட்டது.

#TamilSchoolmychoice

தமிழகத்தில் ‘அப்பா’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த இயக்குநர் சமுத்திரகனி, அதே மகிழ்ச்சியும், உற்சாகத்தோடும், நூல் வெளியீட்டு விழா மேடையை அலங்கரித்தார்.

இதுவரைத் தான் எடுத்த அத்தனை படங்களின் உட்கருத்தும், சமுதாயச் சிந்தனையும், விஜயராணியின் கட்டுரைகளில் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Vijayaraniஅந்நூலிலுள்ள 45 கட்டுரைகளை வைத்து ஒரு திரைப்படமே எடுத்துவிடலாம் அந்த அளவிற்கு, அதில் ஒவ்வொரு கதையும், ஒரு திரைப்படக் கதை என்று தெரிவித்தார்.

மேலும், சமுதாயம் எதிர்நோக்கும் அத்தனை பிரச்சினைகள் குறித்தும், தீர்வுகள் குறித்தும் பேசப்பட்டிருக்கும் இந்நூலை எழுதிய விஜயராணிக்கு சமுத்திரகனி தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Vijay5இவ்விழாவிற்குத் தலைமை வகித்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் நூல் குறித்துப் பேசுகையில், எந்த ஒரு படைப்பும் மற்றவர்களுக்கு நன்மை தரக்கூடியதாக அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில், சுயநலம் மறந்து மற்றவர்களுக்காக வாழக்கூடியது வாழ்க்கை என்ற சிந்தனை அனைவருக்கும் வந்தால், அவசர உலகமா? அவரவர் உலகமா? என்ற கேள்விக்கு ‘எல்லோருக்குமான உலகம்’ என்ற எண்ணம் மேலோங்கும் என்று தெரிவித்தார்.

மேலும், சமயங்கள் குறித்துப் பேசிய அவர், சமயம் என்பதை எப்போதும் நன்மை தரக்கூடியதாகவே கருதுகின்றோம். சமயம் மனிதனை மாற்றுகின்றதா? நம் நாட்டில் நிறைய ஆலயங்கள் கட்டுகின்றோம். ஆலயங்கள் மனிதர்களை மாற்றுகின்றதா? ஆலயங்களின் வளர்ச்சியோடு மனிதர்களும் வளர்கின்றார்களா? என்று கேள்வி எழுப்பி, பின்னர் ஆலயங்களுக்குச் சென்று அன்பு செய்தால் மட்டும் போதாது, சக மனிதர்களுக்கும் அன்பு காட்ட வேண்டும் என்று டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

Vijaya6மேலும், இவ்விழாவில் மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோ எம்.சரவணன், “மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்” என்ற தலைப்பில் இலக்கிய உரையாற்றினார்.

இவர்களோடு மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், டாக்டர் காதர் இப்ராகிம் உள்ளிட்டவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இதுதவிர, மலேசியக் கலைத்துறையைச் சேர்ந்த பல கலைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். முன்னணிக் கலைஞர்களான ஹரிதாஸ், டேனிஸ்குமார், ஜாஸ்மின் மைக்கேல், திலா லக்‌ஷ்மண், மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர்கள் பொன்கோகிலம், தெய்வீகன் எனப் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Vijaya4இவ்விழாவில் பேசிய நூலாசிரியர் விஜயராணி, சமுதாய சிந்தனைகளோடு 45 கட்டுரைகள் அடங்கிய இந்நூல் இந்நாட்டில் ஒவ்வொரு இளைஞரின் கைகளிலும் தவழ வேண்டிய ஒருநூல் என்று தெரிவித்தார்.

மேலும், இக்கட்டுரைகளைத் தான் எழுதப் போகிறேன் என்று சொன்னவுடன், அதன் பின்னர் பார்க்கும் போதெல்லாம், “என்ன? எழுதிக் கொண்டிருக்கிறீர்களா? எப்போது வெளியிடப் போகிறீர்கள்?” என்று தன்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த டத்தோ டி.மோகனுக்கு விஜயராணி தனது நன்றியைத் தெரிவித்தார்.

Vijaya10அதேவேளையில், இவ்விழாவில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோ எம்.சரவணன், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் சமுத்திரகனி, டாக்டர் காதர் இப்ராகிம் ஆகியோருக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்நூல் பற்றிய மேல் விவரங்களுக்கும், இந்நூலை வாங்குவதற்கும் கீழ்காணும் பேஸ்புக் பக்கங்களைத் தொடர்பு கொள்ளலாம் :

Vijaya Rani SellappaAvasara Ulagama Avaravar Ulagama