பாரிட் புந்தார் – பேராக் மாநிலத்திலுள்ள பாரிட் புந்தார் நகரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ் வாழ்வியல் இயக்கம் சொந்த கட்டிடத்தை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்திற்கு ‘தமிழ்க் கோட்டம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
“தமிழ்க் கணிமை” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரளான கூட்டத்தின் ஒரு பகுதியினர்…
“தமிழ்க் கோட்டம்” கட்டிடத்திற்காக நிதி திரட்டும் நோக்கிலும், தமிழ் கணினி உலகில் ஏற்பட்டு வரும் நவீன தொழில்நுட்ப மாற்றங்களை பாரிட் புந்தார் மக்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் அறிமுகப்படுத்தும் நோக்கிலும், ‘தமிழ்க் கோட்டமும் தமிழ்க் கணிமையும்’ எனும் நிகழ்ச்சி கடந்த 31 ஜூலை 2016ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை பேராக், பாரிட் புந்தார் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிரியான் மண்டபத்தில் நடைபெற்றது.
பாரிட் புந்தார் மக்களும், சுற்றுவட்டார பள்ளிகளிலிருந்து திரளான மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய தமிழ் வாழ்வியல் சங்கத்தின் செயலாளர் சுப.நற்குணன்…
இந்த நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய கணினி வல்லுநர் முத்து நெடுமாறன், தமிழ்க் கணினி உலகில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களையும், அடுத்து வரப்போகும் புதிய தொழில் நுட்ப வரவுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
தமிழ்க் கணிமை நிகழ்ச்சியில் உரையாற்றிய முத்து நெடுமாறன்…
குறிப்பாக செல்பேசிகளிலும், கையடக்கக் கருவிகளிலும் தமிழை உள்ளீடு செய்யும் குறுஞ்செயலியான செல்லினம் மற்றும் தமிழ் மென்பொருள் முரசு அஞ்சல் ஆகியவற்றில் புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், பயனர்கள் எவ்வாறு இந்தப் புதிய அம்சங்களால் பயனடையலாம் என்பது குறித்தும் முத்து நெடுமாறன் திரைக்காட்சிகளுடன் விளக்கினார்.
மலேசிய நாட்டின் இருமொழி செய்தித் தள குறுஞ்செயலியான செல்லியல் தளத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முக்கிய தொழில் நுட்ப மேம்பாட்டு அம்சங்கள் குறித்தும் முத்து நெடுமாறன் விளக்கங்கள் வழங்கினார்.
குறிப்பாக, இருட்டிலும் செல்லியலை செல்பேசிகளில் இனி வாசகர்கள் படிக்கலாம் என அவர் கூட்டத்தினரின் பலத்த கைத்தட்டல்களுக்கிடையில் அறிவித்தார்.
விழாவில் தலைமையுரையாற்றிய தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவர் கா.முருகையன்…
தனது உரைக்குப் பின்னர், நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த ஒரு சிலரின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் முத்து நெடுமாறன் விளக்கம் தந்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்க் கணினி உலகுக்கு வழங்கிய பங்களிப்பிற்காகவும் முத்து நெடுமாறன் விழா ஏற்பாட்டுக் குழுவினரால் சிறப்பு செய்யப்பட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மலேசியாவின் பிரபல கவிஞரும், முத்து நெடுமாறனின் தந்தையுமான முரசு நெடுமாறனும், அவருடைய இலக்கியப் பங்களிப்பிற்காக விழாக் குழுவினரால் சிறப்பு செய்யப்பட்டார்.
கவிஞர் முரசு நெடுமாறன் தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவர் கா.முருகையனால் சிறப்பிக்கப்படுகின்றார்…
விழாக் குழுவினருடன் சிறப்பு செய்யப்பட்ட பிரமுகர்கள் (இடமிருந்து) தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் செயலாளர் சுப.நற்குணன், முத்து நெடுமாறன், முரசு நெடுமாறன், பினாங்கு தொழிலதிபரும், தமிழ்ப் பற்றாளருமான டத்தோ புலவேந்திரன், தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவர் கா.முருகையன்