கராச்சி – பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள குவெட்டா என்னும் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று திங்கட்கிழமை மாலை தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் இதுவரை 65 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. சுமார் 150 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில், அதிகமானோர், வழக்கறிஞர்களும், பத்திரிக்கையாளர்களும் ஆவர்.
இன்று காலையில் சுடப்பட்டு மாண்ட பலுசிஸ்தான் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவரான வழக்கறிஞர் பிலால் அன்வார் காசி இந்த மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, அங்கு அதிகமான வழக்கறிஞர்களும், பத்திரிக்கையாளர்களும் குழுமியிருந்தனர்.
அப்போது, தற்கொலைத் தாக்குதல் நடத்திய தாக்குதல்காரன், 8 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.
வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்ட சத்தங்கள் கேட்டதாகவும் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.