ரியோ டி ஜெனிரோ – அமெரிக்காவின் நீச்சல் வீரர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீச்சல் போட்டியில் தனது 19வது தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
4 பேர் கொண்ட குழுக்கள் கலந்து கொள்ளும் 100 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் ‘பிரி ஸ்டைல்’ என்னும் பிரிவில் (4 X 100) அமெரிக்கக் குழுவில் மைக்கல் பெல்ப்சும் பங்கு பெற்றார்.
31 வயதான பெல்ப்ஸ் கலந்து கொள்ளும் ஐந்தாவது ஒலிம்பிக்ஸ் இதுவாகும். நேற்று ஞாயிற்றுகிழமைதான் ரியோ ஒலிம்பிக்சின் முதல் போட்டியில் பெல்ப்ஸ் பங்கு பெற்றார்.
இந்தப் போட்டியில் கடந்த 2012 இலண்டன் ஒலிம்பிக்சில் தங்கம் வென்ற பிரான்ஸ் குழு இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது. ஆஸ்திரேலியா வெண்கலப் பதக்கம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இதுவரை யாரும் அடையாத சாதனையாக, 19 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 23 பதக்கங்களை ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டிகளில் மட்டும் பெல்ப்ஸ் பெற்றிருக்கின்றார்.