கோலாலம்பூர் – செப்டம்பரில் நடைபெறவிருக்கும் 28-வது மலேசியத் திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான பிரிவில் போட்டியிடத் தகுதி பெற வேண்டுமானால் அப்படம் 70 சதவிகிதம் மலாய் மொழி வசனங்களைக் கொண்டிருக்க வேண்டும் என மலேசியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுவது எதன் அடிப்படையில்? என்று விளக்கமளிக்க வேண்டும் என ‘ஜகாட்’ இயக்குநர் சஞ்சய் குமார் பெருமாள் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நாங்கள் ஆய்வு செய்த வரையில், மலேசிய தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சட்டம் 1981 (பிரிவு 244)-ன் படி,திரைப்படத் தயாரிப்பில் தேசிய மொழிப் பயன்பாடு பற்றி குறிப்பிடப்படவில்லை”
“உண்மையில், ஒரு தேசியப் படம் அல்லது மலேசியப் படம் எதனை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதற்கு எந்த ஒரு வரையறையும் இல்லை” என்று சஞ்சய் தெரிவித்துள்ளார்.
எனினும், மலேசியத் திரைப்பட விழாவின் நீதிபதிக் குழுவின் தலைவர் நான்சி ஃபூ கூறுகையில், உள்ளூர் படங்கள் 70 சதவிகிதம் மலாய் மொழி வசனங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த விதிமுறை எப்போது கொண்டுவரப்பட்டது என்று தனக்குத் தெரியாது என்றும் நான்சி கூறியுள்ளார்.
மலேசிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் (பிஎப்எஎம்) தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகமும் (ஃபினாஸ்) மலாய் மொழிப்படங்கள், மலாய் மொழி அல்லாத படங்களைப் பிரித்து, மலாய் மொழி அல்லாத படங்களுக்கு சிறப்புப் பிரிவுகளை வகுத்திருப்பது அப்படத்தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இம்முடிவால், மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட ‘ஜகாட்’, ‘ஒலாபோலா’ உள்ளிட்ட படங்கள் திரைப்பட விழாவில், சிறந்த படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குநர் ஆகியவற்றின் கீழ் போட்டியிட முடியாது என்றும், அவை மலாய் மொழி அல்லாத படங்களுக்கான பிரிவுகளின் கீழ் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரத்தை அறிந்து நடிகர் அப்ட்லின் ஷாவுகி மற்றும் ஒளிப்பதிவாளர் மொகமட் நூர் காசிம் ஆகியோர் திரைப்பட விழாவைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
அவர்களின் முடிவிற்கு நன்றி சொல்லியுள்ள இயக்குநர் சஞ்சய், தாங்கள் திரைப்பட விழாவைப் புறக்கணிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
“சகக் கலைஞர்கள் போல், நாங்களும் அதே இலக்கை நோக்கித் தான் பணியாற்ற நினைக்கின்றோம். ஆனால், நாங்கள் அதையே வேறு ஒரு வியூகத்தில் செய்வோம். திரைப்பட விழாவில் தொடர்புடையவர்களோடு, பேச்சுவார்த்தை நடத்தினால், இந்த விவகாரம் தீர்க்கப்படும் அல்லது முன்னேற்றம் காணும் என நாங்கள் நம்புகின்றோம்” என்று சஞ்சய் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் மலேசியாகினி தகவல் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், அண்மையில் நியூயார்க் திரைப்பட விழாவில் பங்கேற்ற ‘ஜகாட்’ அங்கு மலேசியப் படமாகப் பார்க்கப்பட்ட போது, மலேசியாவில் அது அவ்வாறு பார்க்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘ஜகாட்’ என்று மலாய் மொழியில் பெயர் வைத்ததால், தமிழர்கள் அதனைப் புறக்கணித்தார்கள், ஆனால் இப்போது மலேசியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதனை மலாய் மொழி அல்லாத பட வரிசையில் தரம் பிரிக்கிறது என்றும் சஞ்சய் தனது பேஸ்புக்கில் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.