Home Featured உலகம் போதைப் பொருள் கடத்தல்: கர்ப்பிணி உட்பட 3 மலேசியர்கள் இந்தோனிசியாவில் கைது!

போதைப் பொருள் கடத்தல்: கர்ப்பிணி உட்பட 3 மலேசியர்கள் இந்தோனிசியாவில் கைது!

593
0
SHARE
Ad

lombok3ஜகார்த்தா – போதைக் கடத்தல் வழக்குகளுக்கு இந்தோனிசியா வழங்கும் கடுமையான தண்டனைகள் பற்றித் தெரிந்தும் கூட, அது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்த ஆண்டு 14 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்போவதாக அறிவித்திருந்த இந்தோனிசியா, அவர்களில் 4 பேருக்கு தண்டனை நிறைவேற்றிவிட்டு, இன்னும் 10 பேரை நூசாகம்பாங்கான் சிறையில் வைத்துள்ளது.

இந்நிலையில், அண்மையில் சுமார் 1.9 கிலோ எடையுள்ள போதைப் பொருளை (crystal methamphetamine) தீவுக்குள் கடத்த முயன்ற பெண் உட்பட 3 மலேசியர்கள் லோம்போக் விமான நிலையத்தில், பிடிபட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அவர்களில் 21 வயதான அந்தப் பெண் கர்ப்பிணியாக இருப்பதாகவும் காவல்துறைத் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரில் இருந்து லோம்போக் செல்லும் ஏர் ஆசியா விமானத்தில் வந்த அந்த மூன்று மலேசியர்களும், தங்களது உள்ளாடைகளில் 1.9 கிலோ மதிப்பிலான போதைப் பொருளை மறைத்து வைத்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன் இந்தோனிசிய மதிப்பு 3.5 பில்லியன் ரூபியா (மலேசிய மதிப்பில் 1.07 மில்லியன் ரிங்கிட்) ஆகும்.

அவர்கள் மூவரும் சோதனைகளைக் கடந்து விட்டாலும் கூட, அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள் முழு உடல் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களின் அந்தரங்கப்பகுதியில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

படம்: ஜகார்த்தா போஸ்ட்