ரியோ டி ஜெனிரோ – டைவிங் எனப்படும் பெண்களுக்கான முக்குளிப்பு போட்டியில் மலேசியாவின் போட்டியாளர்கள் சியோங் ஜுன் ஹூங் மற்றும் பண்டெலெலா ரினோங் இருவரும் இணைந்த ஜோடி மலேசியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற 10 மீட்டர் உயரமுள்ள மேடையிலிருந்து குதிக்கும் முக்குளிப்பு (டைவிங்) போட்டியில் இரண்டாவது நிலையைப் பெற்று இருவரும் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
இதே போட்டியில் சீனா தங்கம் வென்றது. மூன்றாவதாக வெண்கலத்தை கனடா வென்றது.
தங்களின் வெற்றி குறித்து கருத்துரைத்த பண்டெலெலா “மலேசியாவுக்காக முதல் பதக்கத்தைப் பெற்றதில் பெருமை கொள்கிறோம். எங்களுக்கு நிறைய அழுத்தங்கள் இருந்தன. ஆனால், அமைதியாக இருந்து, போட்டியில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்றும், பயிற்சியின்போது செய்ததையே முறையாக செய்வோம் என்றும் எங்களுக்கு நாங்களே கூறிக் கொண்டோம்” எனக் கூறியுள்ளார்.
பண்டெலெலா 2012 இலண்டன் ஒலிம்பிக்சில் வெண்கலம் வென்றவராவார்.
மீண்டும் இருவரும் தனித் தனியாக 10 மீட்டர் உயர மேடையில் இருந்து முக்குளிக்கும் போட்டியில் ஆகஸ்ட் 17ஆம் தேதி பங்கு பெறுவார்கள்.
மேலும் ஜூன் ஹூங் 3 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கும் முக்குளிப்பு போட்டியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பங்கு பெறுவார்.
நேற்று இருவரும் பெற்ற வெற்றியின் காரணமாக, நடக்கப் போகும் போட்டிகளிலும் இவர்கள் இருவரும் மலேசியாவுக்கு பதக்கங்களை வெற்றி கொண்டு தருவார்கள் என்ற நம்பிக்கை தற்போது பெருகியுள்ளது.
இதற்கிடையில் மலேசியாவுக்கு ரியோ ஒலிம்பிக்சில் முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த சியோங் ஜுன் ஹூங் மற்றும் பண்டெலெலா ரினோங் இருவருக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ள பிரதமர் நஜிப், அவர்களின் வெற்றியால் தான் பெருமையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.