சென்னை – “கிரேட் டிரெய்ன் ரோப்பரி” (The Great Train Robbery) என்பது ஒரு முறை இலண்டனில் நடந்த வரலாற்றுபூர்வ இரயில் கொள்ளை சம்பவம். பின்னர் பல கதைகளாகவும், திரைப்படமாகவும் அந்த சம்பவம் உருவாக்கம் செய்யப்பட்டது. அதற்கு நிகரான கொள்ளை சம்பவம் தமிழ் நாட்டில் நடந்தேறி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.
சேலத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 3.55 மணியளவில் சென்னை வந்தடைந்த இரயிலில் இருந்த ஒரு பெட்டியில் இருந்த கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது.
இதில் திருப்பம் என்னவென்றால், கொள்ளையடிக்கப்பட்டது பழைய நோட்டுகள். அவை பழைய நோட்டுகள் எனத் தெரிந்தே கொள்ளையர்கள் சாமர்த்தியமாகத் தங்களின் கைவரிசையைக் காட்டினார்களா அல்லது ஏமாந்து போனார்களா என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் சுவாரசியக் கேள்வி.
காரணம், மத்திய வங்கியின் புதிய நோட்டுகள் என்றால் அதில் வரிசையாக புதிய எண்கள் இருக்கும். அதைக் கொண்டு, பணத்தை வெளியில் செலவழிக்கும்போது சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். அல்லது அந்த வரிசை எண்கள் கொண்ட பணம் செல்லாது என அறிவித்து விடலாம்.
ஆனால், பழைய நோட்டுகள் என்னும்போது கண்டிப்பாக இவற்றின் வரிசை எண்கள் பதிவு செய்யப்படிருக்காது. எனவே, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கொள்ளையர்கள் தாராளமாக யாருக்கும் சந்தேகம் வராதபடி செலவு செய்யலாம்.
இதன் காரணமாக, கொள்ளையர்கள் அவை பழைய நோட்டுகள் என முன்கூட்டியே நன்கு தெரிந்து கொண்டு கொள்ளையடித்திருக்கலாம்.
ஆனால், இந்தப் பழைய நோட்டுகள் எவ்வளவு தூரம் சிதிலமடைந்திருக்கின்றன, கடைகளில் இவற்றை வாங்கும் அளவுக்கு நல்ல நிலையில் அவை இருக்குமா என்ற கேள்வியும் எழுகின்றது.
இதனால், மத்திய வங்கியின் பணம் எனத் தெரிந்து கொண்டு கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள் பின்னர் அவை பழைய நோட்டுகள் என அறிந்து ஏமாந்து போனார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது.
சென்னை காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.