Home Featured நாடு ‘ஓப்ஸ் சந்தாஸ்’ நடவடிக்கை: பச்சைக் குத்தியிருந்தால் கடும் சோதனை!

‘ஓப்ஸ் சந்தாஸ்’ நடவடிக்கை: பச்சைக் குத்தியிருந்தால் கடும் சோதனை!

560
0
SHARE
Ad

Police-polis-Ops-Cantasகோலாலம்பூர் – ‘ஓப்ஸ் சந்தாஸ் காஸ் 2 – Ops cantas khas2 ‘ நடவடிக்கை மூலம், இரவு கேளிக்கை விடுதிகள், மதுபானக் கூடங்கள் ஆகியவற்றில் திடீரென அதிரடியாக நுழையும் காவல்துறை, அங்கிருக்கும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரைக் கடுமையான சோதனைக்குள்ளாக்கி வருகின்றது.

நாடெங்கிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல், குண்டர் கும்பல் நடவடிக்கைகள், வெட்டுக் குத்து சம்பவங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது காவல்துறை.

இரவு கேளிக்கை விடுதிகளில் ஆட்டம் பாட்டங்களுக்கு நடுவே திடீரென நுழையும் காவல்துறை சிறப்புப் பிரிவினர், முதலில் அங்கிருப்பவர்களைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

பின்னர், சந்தேகத்திற்கிடமானவர்களின் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பறிமுதல் செய்கின்றனர்.

அதன் பின்னர், அங்கிருக்கும் அறை ஒன்றில் வாடிக்கையாளர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து, மேலாடையை அவிழ்க்கச் செய்து, தடை செய்யப்பட்ட குண்டர் கும்பல் சின்னங்களைப் பச்சைக் குத்தியிருக்கிறார்களா? என்று சோதனை செய்கின்றனர். பெண்களை பெண் போலீசார் சோதனை செய்கின்றனர்.

அதற்கு அடுத்ததாக, ஆவணங்கள் சோதனை மேற்கொள்ளப்படுகின்றது. அடையாள அட்டைகளைப் பெற்று அதன் மூலம் குற்றப் பின்னணி சோதனை செய்யப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் வாகனங்களில் ஆயுதங்கள் உள்ளனவா? என்றும் சோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த மூன்று சோதனைகளில் சந்தேகத்திற்கு இடமானவர்கள் உடனடியாகத் தடுத்து வைக்கப்படுகின்றனர். மற்றவர்களிடம் அவர்களின் அடையாள அட்டைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுகின்றனர்.

குறிப்பாக, இந்தியர்கள் அதிகம் கூடும் இடங்களில் தான் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டு வருவதாக, அண்மையில் இச்சோதனைகளைக் கடந்து வந்த ஒருவர் செல்லியலிடம் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

திருத்தம்: முந்தைய செய்தியில் ‘ஓப்ஸ் கண்டாஸ்’ எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.