கோலாலம்பூர் – மஇகா, 70ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்களை வெற்றிகரமாக, பிரதமர் நஜிப் தலைமையில் கொண்டாடியதைத் தொடர்ந்து, நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு (மேலே படம்) ஒன்றை நடத்திய போட்டித் தரப்பான பழனிவேல் அணியினர் தாங்களும் 10 ஆயிரம் பேர் திரளும் மாபெரும் கொண்டாட்டமொன்றை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்திற்கு டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையேற்பார் என்றும், பிரதமரையும் தாங்கள் அழைக்கவிருப்பதாகவும் அந்தப் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசிய ஏ.கே.இராமலிங்கம் தெரிவித்தார்.
நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜோகூர் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், பினாங்கு டத்தோ ஹென்ரி பெனடிக் ஆசீர்வாதம், சிவசுப்ரமணியம், டத்தோ ரமணன் ஆகியோரும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
சோதிநாதன் நிலைமை என்ன?
நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பழனிவேல் தரப்பில் முக்கியத் தலைவராகக் கருதப்படும் டத்தோ சோதிநாதன் கலந்து கொள்ளவில்லை. அவர் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
நீதிமன்ற மற்றும் அரசியல் போராட்டங்களைக் கைவிட்டு விட்டு மீண்டும் மஇகாவில் இணைவதையே சோதிநாதன் விரும்புவதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகளில் அவர் மஇகா தலைவர் டாக்டர் சுப்ரமணியத்துடன் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் ஆரூடங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் “சோதிநாதன் டாக்டர் சுப்ராவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறதே, அது குறித்து உங்கள் கருத்து என்ன?” என பத்திரிக்கையாளர் ஒருவர் நேற்றைய பத்திரிக்கையாளர் கூட்டத்தில் கேள்வி தொடுத்திருக்கிறார்.
அதற்கு பதிலளித்த இராமலிங்கம், “சோதிநாதன் சுப்ராவுடன் பேச்சு வார்த்தை நடத்தினால் அது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில், எங்களையும் சேர்த்துக் கொண்டு கட்சியில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை” என உறுதியோடு கூறியதாக, நேற்றையக் கூட்டத்தில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் ஒருவர் செல்லியலிடம் தெரிவித்துள்ளார்.
மஇகாவுக்குத் திரும்பும் முடிவில் சோதிநாதன் தரப்புக்கும் மற்றவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக பழனிவேல் தரப்பைச் சேர்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சோதிநாதன் அண்மையில் பழனிவேல் தரப்பினரின் முக்கியத் தலைவர்களோடு நடத்திய இரகசியக் கூட்டத்தில் அனைவரும் மீண்டும் மஇகாவுக்குத் திரும்புவதே உசிதமானது என வலியுறுத்தியதாகக் கூறப்படுகின்றது.
அந்தக் கூட்டத்தின் முடிவுப்படி, டாக்டர் சுப்ராவுடன் பேச்சு வார்த்தை நடத்த சோதிநாதனுக்கு பழனிவேல் அணியினர் முதலில் ஆதரவு வழங்கியதாகக் கூறப்படுகின்றது.
ஆனால், அனைவருக்கும் மீண்டும் கிளைகள், தொகுதிகள் வழங்கப்பட்டு, மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே தாங்கள் கட்சிக்குத் திரும்புவோம் என ஒரு தரப்பினர் தற்போது கூறிவருகின்றனர்.
மற்றொரு தரப்பினரோ, இனியும் மஇகாவில் இணைவதில் அர்த்தமில்லை, இப்படித் தனியாக இயங்குவதற்குப் பதிலாக நாமே புதிய கட்சி தொடங்குவோம் என வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.