கோலாலம்பூர்- தேசிய நிலையிலான தகவல் தொழில்நுட்பப் போட்டி ஒன்றை இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு (செடிக்), ஆதரவுடனும், மலேசிய சமூக, கல்வி அறவாரியத்துடன் இணைந்தும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் நடத்தவிருக்கின்றது.
இந்தப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை 13 ஆகஸ்ட் 2016ஆம் நாள் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை, மலாயாப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஐபிபிபி (IPPP) மையத்தில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு செடிக் இயக்குநர் முனைவர் டத்தோ டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரன் சிறப்பு வருகை புரிவார்.
அன்றைய தினத்தில் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. அவை தகவல் தொழில் நுட்பப் போட்டி, வரைதல் போட்டி, வடிவரை போட்டி, இருபரிமாண அசைவூட்டப் போட்டி, அகப்பக்க வடிவமைத்தல் போட்டி ஆகியவையாகும்.
இப்போட்டிகளில் ஏறத்தாழ 50 தமிழ்ப் பள்ளிகளில் இருந்து 310 தமிழ்ப்பள்ளி மாணவர்களும், 100 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 32 ஆண்டுகளாக இயங்கி வரும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் செயல்படுத்தி வரும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தித்தியான் டிஜிட்டல் என்ற தகவல் தொழில் நுட்ப அறிவூட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டுமென கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் தலைவர் குணசேகரன் கந்தசுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.