Home One Line P1 தமிழ்ப் பள்ளிகளுக்கான தேசிய நிலை தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி

தமிழ்ப் பள்ளிகளுக்கான தேசிய நிலை தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி

1180
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – தித்தியான் டிஜிட்டல் திட்ட ஏற்பாட்டில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட, தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்ப போட்டிகள் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நீர், நில இயற்கை வள அமைச்சர் மாண்புமிகு சேவியர் ஜெயகுமார் அவர்கள் கலந்துக் கொண்டார். ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் நாடு தழுவிய அளவில் ஏறக்குறைய 341 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்குபெற்றனர்.

2009-ஆம் ஆண்டு கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கமும் மலேசியச் சமூகக் கல்வி அறவாரியமும் இணைந்து தொடங்கிய தித்தியான் டிஜிட்டல் திட்டம், பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் பிரதமர்துறை இலாகா, சிலாங்கூர் மாநில அரசு, மலேசியச் சமூகக் கல்வி அறவாரியம், மை நாடி அறவாரியம், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம், டிஎச்ஆர் ராகா, மெக்னம் கேர், சுங்கை ஊஜோங் ரோட்டரி கிளப், தனிநபர் திரு. ராமச்சந்திரன் அப்பண்ணன் ஆகியோரின் நிதியுதவியிலும் மாபெரும் கூட்டு முயற்சியில் தொடர்ந்து முன்னகர்த்தப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி நாடு முழுவதும் 50 தமிழ்ப்பள்ளிளைச் சேர்ந்த சுமார் 21,000 மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக தகவல் தொழில்நுட்ப கல்வியினை தமிழ்மொழியில் பயின்று வருகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளில் 49,000 இந்திய மாணவர்கள் ஆறாம் ஆண்டுவரை இத்திட்டத்தில் பங்குபெற்று இடைநிலைப் பள்ளிகளுக்கும் உயர்க்கல்வி கூடங்களுக்கும் சென்றுள்ளனர். இத்திட்டத்தின்வழி, இதில் பங்கு கொண்டிருக்கும் ஒவ்வொரு மாணவரும் வாரத்தில் குறைந்தது ஒரு மணிநேரம் கட்டற்ற மென்பொருள் வாயிலாக சுயமாக கணினியை இயக்கவும், செயல்படுத்தவும் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

மாணவர்களின் திறனை வெளிக்கொணரவும் இத்திட்டத்தைப் பொதுப் பார்வைக்குக் கொண்டு செல்லவும் 2015 தொடங்கி மாநில, தேசிய அளவில் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டிகளில் தித்தியான் டிஜிட்டல் திட்ட மாணவர்கள் மட்டுமின்றி நாட்டிலுள்ள 524 தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் பங்கெடுக்க வழியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வடிவமைத்தல் (Graphic Designing), வலைத்தள உருவாக்கம் (Website Designing), இருபரிமாண அசைவூட்ட வடிவமைத்தல் போட்டி (2D Animation), ஸ்க்ராச்  (Scratch), தகவல் தொடர்பு தொழில்நுட்ப அறிவுப் புதிர் போட்டி (ICT Quiz) போன்றவை வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

இத்திட்டம், கட்டற்ற மென்பொருளின் அதிக பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளதன் அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு மலேசிய சாதனைப் புத்தகத்தில் பெயர் பதித்தது, தகவல் தொழில்நுட்பம் வாயிலாக தமிழ்ப்பள்ளிகளுக்கு உந்துதல் வழங்கியமைக்காக உலகளாவிய இந்திய வம்சாவளியினர் அமைப்பின் (GOPIO) The GOPIO International Excellence Award 2015ஆம் ஆண்டு பெற்றது.

7 முதல் 9 வயதுக்கான Doodle for Google போட்டியில் இத்திட்ட மாணவி வைஸ்னவி (வலம்புரோசா தமிழ்ப்பள்ளி, கிள்ளான்) முதல் பரிசை 2014ஆம் ஆண்டு வென்றது, சிலாங்கூர் மாநில அளவில் 2015ஆம் ஆண்டு சிறந்த கணினி நடுவத்துக்கான விருதை இத்திட்டம் மூலம் முன்னெடுத்த நோர்த் ஹம்மொக் தமிழ்ப்பள்ளி வென்றது ஆகியன இத்திட்டத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.

இந்நிகழ்ச்சியில் தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியின் ஏற்பாட்டு குழு தலைவர் குணசேகரன் கந்தசுவாமி வரவேற்புரை ஆற்றினார். அவர் தமது உரையில், கடந்த மூன்று மாதமாக மாநில நிலையில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற 119 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 341 மாணவர்கள் தேசிய நிலை போட்டிகளில் பங்குகொள்கின்றனர் எனக் குறிப்பிட்டார். மேலும், மாநில நிலையிலான போட்டிகளில் சுமார் 240-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளைப் பிரதிநிதித்து 1700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டு பல நிலைகளில் தங்களது திறன்களையும் அனுபவங்களையும் பெருக்கிக் கொண்டதாக குறிப்பிட்டார்.

இப்போட்டிகளில் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்கேற்பு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது. தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் கீழ் நாடு முழுவதுமுள்ள சுமார் 50 தமிழ்ப்பள்ளிகளில் கணினி நடுவங்களில் கற்றல் கற்பித்தல் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது என்றும் குணசேகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக இத்திட்டம் முறையான பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர்  சேவியர் ஜெயகுமார் கணினிக் கல்வியின் முக்கியத்துவத்தை மேலும் விளக்கிக் கூறினார். தான் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த காலம் துவங்கி தித்தியான் டிஜிட்டல் திட்டத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருப்பதாக தெரிவித்தார். 4ஆவது தொழில்நுட்பப் புரட்சிக்கு ஏற்புடைய பாடத்திட்டங்களைக் கொண்டு இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை சேவியர் எடுத்து வழங்கினார்.