கோலாலம்பூர் – எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் மலேசியாவின் வாடகை வண்டி (டேக்சி) வணிக நிலைமை முற்றாக மாறவிருக்கின்றது. புதன்கிழமை (ஆகஸ்ட் 10) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நில போக்குவரத்து கழகத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் உபர் ( Uber) மற்றும் கிரேப் (Grab) என்ற புதிய வாடகை வண்டி சேவைகளை (டேக்சி) அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மாற்றங்களால், நாட்டில் இயங்கும் 77,000க்கும் மேற்பட்ட வாடகை வண்டி ஓட்டுநர்களின் வருமானத்திலும், வாழ்க்கை முறையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது உபர், கிரேப் வாடகை வண்டிகள் நாட்டில் இயங்கி வந்தாலும், அவற்றுக்கு முறையான அதிகாரபூர்வ அங்கீகாரம் இதுவரை வழங்கப்படவில்லை.
இதற்கான, முறையான சட்டத்திருத்தங்கள் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். பின்னர் டிசம்பரில் புதிய சேவைகள் தொடங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.