நியூயார்க் : தென்கிழக்காசியாவில் இருந்து உதித்த நிறுவனம் கிராப் ஹோல்டிங்ஸ் இன்கொப்பரேட்டட் (Grab Holdings Inc) இன்றைக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலரையும் தாண்டி சந்தை முதலீட்டைக் கொண்டுள்ளது.
மலேசியாவில் உதித்த இந்த நிறுவனம் உள்ளூரில் போதிய ஆதரவை அரசாங்க அமைப்புகள் வழங்காத காரணத்தால், பக்கத்து நாடான சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இன்று மிகப் பெரிய வணிகக் குழுமமாக உருவாகியிருக்கிறது.
பல்முனைத் திறன் வாய்ந்த செயலி மூலம் வாடகைக் கார் வணிகம், உணவு விநியோகம், இணையவழி வங்கிப் பரிமாற்றம் போன்ற சேவைகளை வழங்கி வருகிறது கிராப்.
இப்போது அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவிருக்கும் கிராப் அதன் மூலம் 40 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயரும் என மதிப்பிடப்படுகிறது.
அதாவது இன்றைக்கு நாட்டின் மிகப் பெரிய பங்குச் சந்தை நிறுவனமான மலாயன் பேங்கிங் பெர்ஹாட்டின் மொத்த மதிப்பே 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள்தான். அதைவிட இருமடங்கு மதிப்பீட்டை, அதுவும் குறுகிய காலத்திலேயே கொண்டிருக்கிறது கிராப்.
“மைடேக்சி” (MyTeksi) என முன்பு அழைக்கப்பட்ட கிராப், 2012-ஆம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டது. மலேசியாவின் நிதி அமைச்சின் கீழ் இயங்கும் கிரேடல் பண்ட் சென்டிரியான் பெர்ஹாட் என்ற அமைப்புதான் கிராப் நிறுவனத்திற்கு முதன் முதலில் நிதி உதவி வழங்கிய அமைப்புகளுள் ஒன்று.
இன்றுவரை மலேசியாவின் சந்தை கிராப்பின் முக்கிய சந்தைகளுள் ஒன்று. இருந்தாலும் கால ஓட்டத்தில் தனது தலைமையகத்தை சிங்கப்பூருக்கு மாற்றிக் கொண்டது கிராப்.
கலிபோர்னியாவின் அல்டிமீட்டர் குரோத் கோர்ப் (Altimeter Growth Corp) என்ற நிறுவனத்துடன் கிராப் இணையவிருக்கிறது என கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்துதான் கிராப் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்றும் அதன் மதிப்பு 40 பில்லியன் டாலர்களாக உயரும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
கிராப் நிறுவனத்தில் மலேசியாவின் பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் என்ற மலேசிய அரசாங்கத்தின் முதலீட்டு அமைப்பு, சிங்கப்பூரின் தேசிய முதலீட்டு நிறுவனமான துமாசிக் ஆகியவையும் பங்குகளைக் கொண்டிருக்கின்றன.
தனது வணிகத்தை விரிவாக்கும் முயற்சிகளில் மலேசியாவில் போதுமான ஆதரவும், நிதி உதவியும் கிடைக்காத காரணத்தினால்தான் கிராப் சிங்கப்பூருக்கு தனது தலைமையகத்தை மாற்றிக் கொண்டது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.