Home கலை உலகம் விவேக்கின் இறுதிப் பயணம்

விவேக்கின் இறுதிப் பயணம்

1169
0
SHARE
Ad

சென்னை:மறைந்த நடிகர் விவேக்கின் நல்லுடல் இந்திய நேரப்படி மாலை 5.00 மணியளவில் விருகம்பாக்கத்திலுள்ள அவரின் இல்லத்திலிருந்து ஊர்வலமாக மேட்டுக் குப்பம் மின்மயானம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.

அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அவரின் இறுதி ஊர்வலத்தின்போது வழியெங்கும் பொதுமக்கள் திரளாகத் திரண்டு நின்று அவருக்கு தங்களின் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

அவரின் இறுதிச் சடங்குக்கு தமிழக அரசு அரசு மரியாதை வழங்கியிருக்கிறது. காவல் துறையின் 78 மரியாதை குண்டுகளுடனான முழக்கங்களுடன் விவேக்கின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

#TamilSchoolmychoice

மரியாதை குண்டுகள் முழக்கத்திற்குப் பின்னர் காவல்துறையினர் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

விவேக்கின் நல்லுடலுக்கு அவரின் மகள் தேஜஸ்வினி இறுதிச் சடங்குகள் செய்தார். விவேக்கிற்கு மகன் யாரும் இல்லை. அவரின் ஒரே மகன் பிரசன்னா சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென உடல் நலக் குறைவால் காலமானார். அப்போது முதலே விவேக் மனதளவில் பெரிதும் முடங்கிப் போனார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

விவேக்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தின்வழி அனுதாபங்களைப் பதிவு செய்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலதரப்பட்ட பிரமுகர்களும் விவேக் மறைவு தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்தனர்.

திமுக, அதிமுக தலைவர்களும் குழுவாக வந்து விவேக்கின் நல்லுடலுக்கு அவரின் இல்லம் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

மாரடைப்பு காரணமாக விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 17) அதிகாலை 4.35 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் காலமானார்.

இன்று மாலையே அவரின் இறுதிச் சடங்குகள் தமிழக அரசு மரியாதையுடன் நடைபெற்றது.தமிழ் நாடு அரசின் முடிவுக்கு தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கியிருக்கிறது.

இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரின் நல்லுடல் மேட்டுக் குப்பன் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 15) கொவிட-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக் அதுகுறித்த விழிப்புணர்வு செய்தியையும் வழங்கியிருந்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு, தடுப்பூசி காரணமாக ஏற்படவில்லை என்றும் தமிழக அரசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.