Home Photo News இளவரசர் பிலிப்ஸ் நல்லடக்கம்

இளவரசர் பிலிப்ஸ் நல்லடக்கம்

899
0
SHARE
Ad

இலண்டன் : பிரிட்டனின் எலிசபெத் இராணியாரின் கணவர் இளவரசர் பிலிப்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) தனது 99-வது வயதில் காலமானார். அவரின் இறுதிச் சடங்குகள் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 17) பிரிட்டனின் அரச பாரம்பரியப்படி நடத்தப்பட்டு அவரின் நல்லுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரச குடும்பத்தினர் மட்டுமே நல்லடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிலிப்ஸ் இளவரசரே தனது இறுதிச் சடங்குகள் எப்படி நடைபெற வேண்டும், எத்தகைய அம்சங்கள் தனது இறுதி ஊர்வலத்தில் இடம்பெற வேண்டும் என திட்டவட்டமாக வகுத்து வைத்திருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்பவே அன்னாரின் இறுதிச் சடங்குகளும் நேற்று நடந்தேறியது.

#TamilSchoolmychoice

பிலிப்ஸ் இளவரசர் தானே வடிவமைத்த பச்சை நிற ஜீப் இரக திறந்த வெளி வாகனத்தில் அவரின் நல்லுடல் கிடத்தப்பட்டு அரண்மனை வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து இளவரசர் சார்ல்ஸ், அவரின் மகன்கள், மகள் ஆகியோர் பின்தொடர்ந்து சென்றனர்.

இந்த இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அரச குடும்பத்திலிருந்து பிரிந்து வாழும் இளவரசர் ஹாரி அமெரிக்காவிலிருந்து சிறப்பு விமானத்தில் வந்தடைந்தார். எனினும் அவரின் மனைவி மேகன் மெர்கல் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வரவில்லை.

இளவரசர் ஹாரியும் அவரின் மூத்த சகோதரர் இளவரசர் வில்லியமும் அருகருகே பிலிப்ஸ் நல்லுடல் தாங்கிய வாகனத்தைப் பின்தொடர்ந்து நடந்து வந்தனர். எனினும் அவர்களுக்கு நடுவே மற்றொரு அரச குடும்ப உறுப்பினர் நடந்து வந்தார்.

எலிசபெத் இராணியார் அந்த ஊர்வலத்தில் நடந்து வரவில்லை. எனினும் அவர் இறுதிச் சடங்குகளுக்கான வழிபாடு நடத்தப்பட்ட செயிண்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில் முன்கூட்டியே வந்திருந்து காத்திருந்தார். இந்த தேவாலயம் அரண்மனை வளாகத்திற்குள்ளேயே அமைந்திருக்கிறது.

ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட நல்லுடல் பின்னர் தேவாலயத்தில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது.

அதன்பின்னர் பிலிப்ஸ் இளவரசரின் நல்லுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த இறுதிச் சடங்குகளை பிரிட்டனின் முக்கியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் நேரலையாக ஒளிபரப்பின. மலேசியாவிலும் இந்த இறுதிச் சடங்குகளை ஆஸ்ட்ரோ அலைவரிசைகளின் வழி ஒளிபரப்பப்பட்டன.

பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில்தான் (Westminster Hall) உடலை வைப்பார்கள். ஆனால், அங்கு தனது உடலை வைக்க வேண்டாம் என்று பிலிப் ஏற்கனவே கூறிவிட்டார்.

தனது மூதாதையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, வின்ட்ஸர் காசல் (Windsor Castle) அரச மாளிகையின் ப்ரோக்மோர் (Frogmore) தோட்டத்தில் இளவரசர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்குகள் தொடர்பில் பிரிட்டன் அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம் :