இலண்டன் : பிரிட்டனின் எலிசபெத் இராணியாரின் கணவர் இளவரசர் பிலிப்ஸ் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) காலையில் தனது 99-வது வயதில் காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
உலகம் முழுவதிலும் இருந்து பல தலைவர்களும், பிரமுகர்களும் இளவரசர் பிலிப்ஸ் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
எலிசபெத் அரசியாருடனான 70 ஆண்டுகால மணவாழ்வில் பிலிப்ஸ் பல்வேறு சர்ச்சைகளையும், ஏற்ற இறக்கங்களையும் சந்தித்தாலும் எல்லாக் காலங்களிலும் அவர் எலிசபெத் இராணியாரை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தார்.
அந்த மண வாழ்க்கையில் பிலிப்ஸ் பல தியாகங்களை செய்ய வேண்டியிருந்தது. தன்னை முன்னிலைப்படுத்தாமல் தனது மனைவியும் அரசியுமான எலிசபெத்தை முன்னிறுத்தி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியதிருந்தது.
அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல், அரச குடும்பத்தின் நல்வாழ்வுக்காகவும், அரச பரம்பரையின் தொடர்ச்சிக்காகவும் அவர் அரண்மனையின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
ஏராளமான அறப்பணிகளிலும் அவர் ஈடுபட்டு மில்லியன் கணக்கான பணத்தை நற்பணிகளுக்காக அவர் திரட்டியிருக்கிறார்.
அண்மையக் காலமாக அவர் உடல் நலக் குறைவினால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமகிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பிலிப்ஸ் இரண்டாவது உலக யுத்தத்திலும் பங்கெடுத்த பெருமையைப் பெறுகிறார்.
பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிலிப்ஸ் இளவரசரின் சேவைகளையும், பணிகளையும் பாராட்டு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.