Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: வாகா – எல்லை கடந்த காதல் கதை..சொல்லிய விதத்தில் ஈர்க்கவில்லை..

திரைவிமர்சனம்: வாகா – எல்லை கடந்த காதல் கதை..சொல்லிய விதத்தில் ஈர்க்கவில்லை..

1647
0
SHARE
Ad

Wagah7கோலாலம்பூர் – இராணுவத்தில் குடிக்க இலவசமாக மதுபானங்கள் கிடைக்கும், போர் வந்தால் மட்டும் தான் கஷ்டப்பட வேண்டும் மற்ற நேரங்களில் குடித்துவிட்டு நன்றாக ஓய்வெடுக்கலாம் என பெரியப்பா மகன் சத்யன் சொல்ல, அதனை நம்பி காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்கிறார் விக்ரம் பிரபு.

ஆனால் அங்கு போன பின்னர் தான் தெரிகிறது. தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில், கொட்டும் பனியில், ஆள் அரவமே இல்லாத இடங்களில் துப்பாக்கியை ஏந்தியபடி காவல் காக்க வேண்டும் என்று. இதனால் வெறுப்பின் உச்சத்திற்குச் செல்லும் விக்ரம் பிரபு, தற்செயலாக அங்கு ஒரு கிராமத்தில் வசிக்கும் இஸ்லாம் பெண்ணான ரன்யாவைச் சந்திக்கிறார்.

பார்த்த உடனே அவளின் மேல் காதல் வந்துவிடுகின்றது. அதன் பின்னர் இராணுவப் பணியை ஒரு ஓரமாக வைத்து விட்டு, அந்தப் பெண் பின்னாலேயே அலைகிறார். அந்தக் காதலுக்கும் ஒரு சிக்கல் வருகின்றது. அதுவும் எல்லை கடந்த சிக்கல். காதலை ஜெயித்தாரா? இந்தியா திரும்பினாரா? என்பதே சுவாரசியத் திருப்பங்கள்.

#TamilSchoolmychoice

ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஸ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

நடிப்பு

Wagah Movie stills (2)தமிழ்நாட்டில் எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து, படித்து வளர்ந்து, இந்திய எல்லைப் பாதுகாப்புப் பிரிவில் சேர்ந்து காஷ்மீரில் பணியில் இருக்கும் எத்தனையோ இராணுவ வீரர்களின் சாயல், அப்படியே விக்ரம் பிரபுவிற்கு உள்ளது. எந்த ஒரு ஹீரோயிசமும் தெரியாமல் அந்தக் கதாப்பாத்திரத்திற்கு அவரது முகம் அப்படியே பொருந்தியிருக்கிறது.

படம் முழுவதும் தனது இயல்பான நடிப்பாலும், உடல்மொழியாலும், வசனங்களாலும் கவர்கிறார் விக்ரம் பிரபு.

ரன்யா .. ஹன்சிகா மோத்வானியின் சாயலில் இருக்கிறார். சில அழுகைக் காட்சிகளில் ஹன்சிகாவோ எனச் சந்தேகம் அடையும் அளவிற்கு இருவருக்கும் பல ஒற்றுமைகள். நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.

Ranya-Spicy-Photoshoot-Photவிக்ரம் பிரபும் சித்தப்பாவாக கருணாஸ் நல்ல தேர்வு. ஆனால் அவருக்கு இன்னும் அழுத்தமான காட்சிகள் கொடுத்திருக்கலாம்.

இவர்கள் தவிர படத்தில் தெரிந்த முகங்களோ, சொல்லும் படியான கதாப்பாத்திரங்களோ குறைவு.

திரைக்கதை

படத்தின் திரைக்கதை அமைப்பு ஆரம்பத்தில் ஆர்வத்தைத் தூண்டியது. விக்ரம் பிரபு இராணுவத்தில் சேர்ந்து காஷ்மீர் வந்தவுடன், காதலியைச் சந்தித்தவுடன், ‘இருபூக்கள் கிளைமேலே’ என உயிரே படப் பாடல் நினைவுக்கு வர, சரி என்னமோ சொல்லப் போகிறார்கள் என்று, நிமிர்ந்து உட்கார்ந்து கொள்கிறோம்.

wagah-2ஆனால், கடைசி வரை அந்தக் காதலில் ஒரு உப்பு சப்பே இல்லை. விக்ரம் பிரபு தீவிரவாதி போல் நடித்து காதலியின் வீட்டுக்குள் நுழைகிறார், காதலியை ஒரு போட்டோ எடுத்து அம்மாவுக்கு அனுப்ப முயற்சி செய்கிறார், இப்படியாக ஏற்கனவே பல படங்களில் பார்த்து சலித்த காதல் காட்சிகள்.

அடுத்ததாக, இரண்டு நாட்டுக்கு நடுவில் உள்ள எல்லைப் பிரச்சினைகளை, ஒரு காதலை வைத்து சொல்லி ஒற்றுமையை வளர்க்க நினைத்தது சரி.. ஆனால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் படைகளையும் விக்ரம் பிரபுவை வைத்தே அழிக்க நினைத்த ஹீரோயிசம் ரொம்ப அதிகமாகவே தெரிகின்றது.

wagah-movie-stills-600x357குறைந்தது 50 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் விக்ரம் பிரபுவை நோக்கி பெரிய பெரிய துப்பாக்கிகளால் சுடுகிறார்கள். ஆனால் கடைசி வரை ஒரு குண்டு கூட அவர் மேல் துளைக்கவில்லை என்பது நம்பும் படியாக இல்லை. விஜயகாந்த் படங்களின் ஞாபகம் வருவதைத் தடுக்க முடியவில்லை.

மற்றபடி, இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் வாழும் மக்களின் நேசம், பாசம், சகோதரத்துவம் குறித்த பார்வையும், வசனங்களும் ரசிக்க வைத்தன.

ஒளிப்பதிவு, இசை

எஸ்.ஆர்.சதீஸ்குமார் ஒளிப்பதிவில் காஷ்மீர் பனிமலைப் பகுதிகள், இராணுவ குடியிருப்புகள், மலைக்கிராமங்கள், நதிகள் எனக் காட்சிகள் அனைத்தும் அழகு.

Wagah-movie-images-9டி.இமானின் இசையில் பாடல்கள் ஒகே இரகம். கேட்டவுடன் மனதில் பதியும் அளவிற்கு இல்லை. காதல் காட்சிகளில் பின்னணி இசை ரசிக்க வைக்கின்றது.

மொத்தத்தில் ‘வாகா’ – எல்லை கடந்த காதல் கதை.. சொல்லிய விதத்தில் ஈர்க்கவில்லை..

-ஃபீனிக்ஸ்தாசன்