பேங்காக் : உலகம் எங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடான தாய்லாந்தில் வியாழன், வெள்ளிக்கிழமை இரண்டு நாட்களில் ஐந்து வெவ்வேறு இடங்களில் – அதுவும் சுற்றுலாப் பயணிகள் கூடும் மையங்களில் – வரிசையாக வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் ஒரே குழுவினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கின்றது என, தாய்லாந்தின் இராணுவம் நடத்தும் அரசாங்கத்தின் துணைப்பிரதமர் ஜெனரல் பிராவிட் வோங்சுவான் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுவரை எந்தக் குழுவும் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்கவில்லை என்பதோடு, காவல் துறையினரும் இதுவரை எந்தக் குழு இதைச் செய்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஹூவா ஹின் உல்லாசத் தளத்தில் வியாழக்கிழமை இரவு, அரை மணி நேர இடைவெளியில் வெடித்த இரண்டு குண்டுகள் ஒரு பெண்மணியைப் பலி வாங்கியதோடு, 21 பேர்களை காயங்களுக்கு உள்ளாக்கியது.
அதே நாளில் டிராங் என்ற பிரதேசத்திலுள்ள சந்தை ஒன்றில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, அறுவர் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை காலை மீண்டும் ஹூவா ஹின் பிரதேசத்தில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவங்கள் ஒருவரை உயிர்ப்பலி கொண்டு மூவருக்கு காயங்களை ஏற்படுத்தியது.
இறுதியாக, பிரபல உல்லாசத் தீவான புக்கெட்டில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
சூராட் தானி என்ற இடத்தில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் ஒருவர் இறந்துள்ளார்.
பாங் ங்கா, என்ற சந்தைக்கு அருகில் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன என்றாலும், இதுவரை யாரும் காயமடையவில்லை.
இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் செல்பேசிகள் வழி இயக்கப்பட்டு, வெடிக்கச் செய்யப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.