ஜகார்த்தா – அமெரிக்க குடியுரிமையும், இந்தோனிசிய குடியுரிமையும் வைத்திருந்த காரணத்திற்காக, எரிசக்தித் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்திருக்கிறார் இந்தோனிசிய அதிபர் ஜோகா விடோடோ.
இந்தோனிசியாவைச் சேர்ந்த அர்சண்ட்ரா தாகார் என்ற பெட்ரோரோலிய பொறியியலாளர் அமெரிக்காவில் 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற இந்தோனிசிய அமைச்சரவை மாற்றத்தில் அவர், எரிசக்தி மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரது அமெரிக்க குடியுரிமை விவகாரம் வெளியே கசியவே, நேற்று திங்கட்கிழமை இரவு, அர்சசண்ட்ரா அமைச்சரவையிலிருந்து பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.
இந்தோனிசியாவைப் பொறுத்தவரையில் இருநாட்டுக் குடியுரிமை வைத்திருக்க முடியாது. வெளிநாட்டில் குடியுரிமை பெறுவதற்கான சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு விட்டால், தன்னிச்சையாகவே இந்தோனிசிய குடியுரிமை விலக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், தான் இன்னும் இந்தோனிசிய பிரஜை தான், தன்னிடம் இந்தோனிசிய கடப்பிதழ் இருப்பதாக அர்சண்ட்ரா கூறி வருகின்றார்.