Home Featured கலையுலகம் ஓய்வின்றி உழைத்தான் முத்து – தங்கர் பச்சான் உருக்கமான கடிதம்!

ஓய்வின்றி உழைத்தான் முத்து – தங்கர் பச்சான் உருக்கமான கடிதம்!

933
0
SHARE
Ad

Thangarசென்னை – மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் எழுதியுள்ள உருக்கமான கடிதம்.

“தலையில் இடி விழுந்ததுபோல் என்று சொல்வார்களே! அது இதுதானா? கல்லூரியில் படிக்கிறான் எனச்சொல்லி முத்துக்குமாரை அவனது அப்பாதான் 1993 ஆம் ஆண்டில் எனது “வெள்ளைமாடு” நூல் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தினார். இருபத்தி நான்கு மணி நேரமும் எழுத்து, சிந்தனை, புத்தகம் என்றே அலைந்தவன். என்னை உரிமையுடன் கண்டிப்பவனும், இறுதிவரை எனக்கு உண்மையாய் இருந்தவனும் தம்பிதான்.”

“எந்த ஒரு தொலைப்பேசி அழைப்புக்கும் பதில் சொல்லாமல் இருந்ததில்லை. இனி, அவனிடமிருந்து பதில் வராது என நினைக்கிறபோது என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.”

#TamilSchoolmychoice

“முத்துவுக்காக பெரிதாக எதையும் நான் செய்துவிடவில்லை. சில இசையமைப்பாளர்கள், சில இயக்குனர்களிடம் அவனுக்கு வாய்ப்புத்தரச்சொல்லி அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அன்புக்காகவும், உறவுகளுக்காகவும் ஏங்கியவன். உறவுகளைப்பற்றி அக்கறைப்பட்ட, விசனப்பட்ட ஒரு கவிஞன் இவன்போல் யாராவது இருப்பார்களா தெரியவில்லை. அண்ணா! என என்னை அழைக்கும்போது ஒவ்வொருமுறையும் நெகிழ்ந்திருக்கிறேன். இருவரும் ஒருதாய் வயிற்றில் பிறக்காத குறைதான்!”

“கடந்த பத்து ஆண்டுகளாக அவன் முகத்தில் தெளிவும், மலர்ச்சியும் இருந்ததில்லை. தூக்கத்தில் எழுந்து நடப்பவன் மாதிரியே இருப்பான். இரண்டு நிமிடம் இடைவெளி கிடைத்தாலும் அவனை அறியாமலே அவனது கண்கள் மூடிக்கொள்ளும்.”

“அவனிடம் நான் அன்பு காட்டியதைவிட அதிகமாக திட்ட மட்டுமே செய்திருக்கிறேன். ஓய்வற்ற அவனது உழைப்பு அவனை எங்கே கொண்டு போய்விடும் என்பதையும் எச்சரித்திருக்கிறேன். அவன் உடல்நலத்தைப்பற்றி என்னைவிட கவலைப்பட்டவர்கள் யாராவது இருப்பார்களா எனத் தெரியவில்லை. தூங்காத தூக்கத்தையெல்லாம் சேர்த்து மொத்தமாக தூங்கப்போய்விட்டான் என் முத்து.”

“அவனது பாடல்களும், கவிதைகளும், எழுத்துக்களும் மட்டுமே நமக்குத்தெரியும். எல்லோரும் சேர்ந்து மொத்தமாக நேற்றோடு புகழ்ந்து முடித்து விட்டோம்.”

“அண்ணா! இந்த ஆண்டும் அதிகப்பாடல்கள் எழுதியவன் நான்தான் அண்ணா” என ஒவ்வொரு ஆண்டும் சொல்லி வந்தான். ஒவ்வொரு விருது கிடைத்தபோதும் முதலில் எனக்குத்தான் சொன்னான். பெண் பார்த்து விட்டேன், ஆதவன் பிறந்துவிட்டான், யோகலட்சுமி வந்திருக்கிறாள் என அவனது சொத்துக்களாயிருக்கின்ற மனைவி, குழந்தைகள் குறித்த ஒவ்வொரு சேதியையும் உடனுக்குடன் என்னோடு பகிர்ந்து மகிழ்ந்தான்.”

“தாயின் முகத்தை ஐந்து வயதோடு மறந்துபோன அவன் போலவே தந்தை முகமறியாத மகளாக யோகலட்சுமி இருந்து விட்டாள். என் அம்மாவின் முகம் இதேதான் எனும் மகிழ்ச்சியில் சில நாட்களே வாழ்ந்து முடித்துவிட்டான். நேற்றிரவு முழுக்க புரண்டு புரண்டு படுத்து உறங்குவதற்காக எவ்வளவோ முயன்றும் முடியவேயில்லை.”

muthukumar-poet-decd“தூங்கிக்கொண்டிருந்த முத்துவின் முகத்தருகில் வெறித்து புலம்பியபடியே அவனது மனைவியும், தலைமாட்டில் அமர்ந்தபடி என்ன நடந்திருக்கிறது என்பது தெரியாமல் திகைத்திருந்த ஆதவனும், இவை எதுவுமேத் தெரியாமல் யாரோ ஒருத்தரின் தோளில் பசியில்  பாலுக்காக அழுதுக்கொண்டிருந்த ஆசை மகள் யோகலட்சுமியும் மீண்டும் மீண்டும் என் நினைவில் வந்து என் கண்களைவிட்டு அகலாமல் என்னை புலம்பவைத்து விட்டார்கள்.”

“அப்பா என்று கூட இன்னும் சொல்லவராத இந்த குழந்தையை வைத்துக்கொண்டு இனி என்ன செய்யப்போகிறேன் அண்ணா!” என என்னைப்பிடித்துக்கொண்டு கதறிய முத்துக்குமார் மனைவியின்  குரலுக்கு இங்கே என்ன பதில் இருக்கிறது? நான் இருக்கிறேன் என்றுதான் என்னால் சொல்ல முடிந்தது.”

“மீண்டும், முத்துக்குமாரைப்போல் அவனது இளந்தளிர்களும் இந்த போலியான உலகத்தில் போராடி கரை சேர வேண்டும். அவன் 1500 பாடல்கள் எழுதி என்ன சம்பாதித்தான் என எனக்குத்தான் தெரியும். சொந்த பந்தங்களையும், நண்பர்களையும் விட்டுக்கொடுக்காத முத்துக்குமாருக்கு பெரும்பொருளாக அது சேரவேயில்லை. நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது. பணமில்லாமல் எதுவும் நடக்காத இந்த நாட்டில் இந்தக் கவிஞனின் பிள்ளைகளும் அவன் போன்ற பண்புள்ள, சிறந்த மனிதாக வாழ்ந்து காட்டத்தான் வேண்டும்.”

“ஹாவேர்ட் பல்கலைக்கழகத்தில் ஒதுக்க இருக்கும் தமிழ் இருக்கைக்காக 50 கோடி ரூபாய் வேண்டும் என்று, தமிழை மூச்சாக நினைப்பவர்கள் பணத்திற்காக யார் யாரிடமோ கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான நிதியைத் திரட்டத்தான் ஐந்து வாரப்பயணமாக தம்பி அமெரிக்கா சென்று ஒவ்வொரு கூட்டத்திலும் பேசினான். “இந்த அசைச்சல் உனக்குத் தேவையா பேசாமல் உடம்பை கவனி; இருக்கிற வேலையைப்பார்” என அவன் செல்வதற்கு முன் சொன்னேன். “தமிழுக்காகப் பணி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டாமா?” என சொல்லிவிட்டுப்போனான்.”

“இங்கிருந்து எழுதியப் பாடல்களைவிட அமெரிக்காவிலிருந்தபடி பயணத்துக்கிடையில் எழுதியப் பாடல்கள்தான் அதிகம். “மகனை அறிமுகம் செய்ய இருக்கிறேன். அந்தப் படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் நீதான் எழுத வேண்டும், இசையமைப்பாளர் யார் என்பதையும் நீயே முடிவு செய்” என ஒரு வாரத்திற்குமுன் கைப்பேசியில் அழைத்துக்கேட்டேன். உடல்நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையிலிருந்து திரும்பியிருப்பதாகவும், டைபாய்ட் காய்ச்சல்தான் பாடாய் படுத்திவிட்டதாகவும், ஆறு மாத காலம் ஓய்வு தேவையென்றும் சொன்னான்.”

“நான் திட்டப்போகிறேன் என்பதை புரிந்து கொண்டு அமெரிக்கப் பயணத்தில் போகும் வழிகளில் சாப்பிட்ட கேஎப்சி, மெக்டொனால்ட்ஸ் சாப்பாடுதான் ஏற்றுக்கொள்ளாமல் போய்விட்டதாகச் சொன்னான். நான் உடனே பார்க்க வருகிறேன் எனச் சொன்னதை மறுத்து பாடல் எழுதும்போது சந்தித்தால் போதுமெனத் தடுத்துவிட்டான்.”

“தமிழைக் காப்பாற்ற நிதி திரட்டப்போன கவிஞன் நா.முத்துகுமார் தன் குடும்பத்தை நடுவழியிலேயே விட்டுவிட்டுப் போய் விட்டான். தமிழைக் காப்பாற்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள்! இனி முத்துக்குமாரின் குடும்பத்தைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? தமிழ் சினிமாவில்  ஒரு படத்திற்கு ஒரு பெரிய  கதாநாயகனுக்கு தரப்படுகிற சம்பளத்தில் பதினைந்தில் ஒரு பகுதியைத்தான் இந்த பதினைந்து ஆண்டுகள் முழுக்க இரவு பகலாக கண்விழித்து சம்பாதித்தான். படைப்பாளிகள் எப்போதுமே பாவப்பட்டவர்கள்தான்.”

“தமிழ் இருக்கை அமைக்க 50 கோடி ரூபாய்க்காக கையேந்துவதை உலகத்தமிழ் செல்வந்தர்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நம் அரசாங்கமும் அதையெல்லாம்  பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.”

“எண்ணற்ற எத்தனையோ படைப்பாளிகளைக் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு சிறிதும் குற்றவுணர்ச்சி இல்லாமல்  அவர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு நினைவுநாளில் மட்டும் பணம் கொடுத்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்துகொண்டு சிலைக்கு மாலை போட்டுக்கொண்டிருக்கிறோம்.”

“இவர்கள்தான் தமிழர்கள்! இதுதான் தமிழ் பண்பாடு!”

“முத்துக்குமாருக்கு இப்போது புரியும்! தனக்கு உடல் முக்கியம், மனைவிக்கு கணவன் முக்கியம், தன் செல்வங்களுக்கு தந்தை முக்கியம், குடும்பத்துக்கு தலைவன் முக்கியம் என்பது!” என்று இயக்குநர் தங்கர் பச்சான், ‘செம்புலம் என்ற தனது வலைப்பூவில் எழுதியுள்ளார்.