Home Featured கலையுலகம் தயாரிப்பாளர்கள் சங்கம் கொந்தளிக்கும் அளவிற்கு விஷால் அப்படி என்ன தான் சொன்னார்?

தயாரிப்பாளர்கள் சங்கம் கொந்தளிக்கும் அளவிற்கு விஷால் அப்படி என்ன தான் சொன்னார்?

1040
0
SHARE
Ad

vishal

சென்னை – தயாரிப்பாளர்கள் சங்கத்தை அவதூறாகப் பேசிய விஷால், ஒருவாரத்திற்குள் தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அவரது எந்த ஒரு படத்திற்கும் நாங்கள் ஒத்துழைப்பு தர மாட்டோம் எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நேற்று செவ்வாய்கிழமை மாலை நடந்தது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் எஸ்.தாணு தலைமை தாங்கினார்.

#TamilSchoolmychoice

செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் தேனப்பன், கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான தயாரிப்பாளர்களும் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

அக்கூட்டத்தில் விஷாலுக்கு எதிராக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அப்படி என்ன தான் விஷால் கருத்துத் தெரிவித்தார்?

தீபாவளி வெளியீடாக அறிவிக்கப்பட்டுள்ள விஷாலின் ‘கத்தி சண்டை’ படத்திற்காக பிரபல வார இதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்திருந்த விஷால், அதில் தயாரிப்பாளர்கள் நஷ்டமடையக் காரணம் என்ன? என்ற கேள்வி ஒன்றிற்கு அளித்துள்ள பதிலில், “தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தான் காரணம். திருட்டு வி.சி.டி.யை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆக்கப்பூர்வமான வேலைகள் எதுவும் நடக்கவில்லை.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அதோடு, எப்படி நடிகர் சங்கத்தை கையில் எடுத்தோமோ? அதேபோல், ஜனவரியில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலிலும் போட்டியிடுகின்ற சூழல் எங்களுக்கு வந்துள்ளது என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால் கூறிய இந்தக் கருத்து தான் தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.