ரியோ டி ஜெனிரோ – கடுமையானப் போராட்டத்திற்குப் பின்னர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்ற இரண்டு மலேசியப் பெண் முக்குளிப்பு (டைவிங்) வீராங்கனைகள் பதக்கம் எதனையும் பெற முடியவில்லை.
10 மீட்டர் உயர மேடையிலிருந்து நீருக்குள் குதித்து முக்குளிக்கும் போட்டியில் பண்டலீலா ரினோங் (படம் மேலே) நூர் டிபிதா சாப்ரி இருவருமே முதல் 12 விளையாட்டாளர்களுக்குள் தேர்வு பெற்றதே மலேசியாவைப் பொறுத்தவரையில் ஒரு சாதனையாகக் கருதப்படுகின்றது.
இருப்பினும் இறுதிச் சுற்றில் 11-வதாகவே அவரால் வர முடிந்தது. 2012 ஒலிம்பிக்சில் சரவாக் மாநிலத்தின் பண்டலீலா வெண்கலப் பதக்கம் பெற்று மலேசியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியவராவார்.
நூர் டபிதா சாப்ரி (கோப்புப் படம்)
ஆனால், மற்றொரு போட்டியாளரான கோலாலம்பூரைச் சேர்ந்த 17 வயதே நிரம்பிய நூர் டபிதா சாப்ரி, பண்டலீலாவை விட சிறப்பாக முக்குளித்து ஒன்பதாகவது இடத்தைப் பிடித்தார். இளவயது, இனிமையான புன்னகை என மலேசியர்களையும் ஒலிம்பிக் பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளார் நூர் டபிதா. இளம் வயது என்பதால், இந்த விளையாட்டில் சிறப்பான எதிர்காலமும் இருக்கின்றது.
இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு இடத்தையும் சீனாவின் போட்டியாளர்கள் பெற்றனர். மூன்றாவது இடத்தை கனடாவின் விளையாட்டாளர் பிடித்தார்.