மும்பை – பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கு கொண்டு விளையாடும் இந்தியாவின் விளையாட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சத்து ஒரு ரூபாய் அன்பளிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
நாட்டில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கு தான் இந்தப் பங்களிப்பை செய்ய முன்வந்துள்ளதாகக் கூறியுள்ள சல்மான், அரசாங்கமும் விளையாட்டாளர்களுக்கு பல வகைகளில் ஆதரவாக இருந்து வந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.
சல்மான் கான் இந்திய ஒலிம்பிக் குழுவின் நல்லெண்ணத் தூதவராகவும் செயல்படுகிறார்.
தான் ஊக்குவிப்புத்தொகை வழங்குவதை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் உறுதிப் படுத்தியுள்ளார்.
படத்தில் தனது மல்யுத்தத் திறனைக் காட்டும் அனுஷ்கா சர்மா…
சல்மான் நடித்து கடைசியாக வெளிவந்த சுல்தான் படத்தில் அவர் மல்யுத்த வீரராக நடித்திருந்தார். அவரது மனைவியாக வரும் அனுஷ்கா சர்மாவும் படத்தின் கதைப்படி மல்யுத்த வீராங்கனையாக சித்தரிக்கப்பட்டார். கதைச் சம்பவங்கள் ஹரியானா மாநிலத்தைப் பின்னணியாகக் கொண்டிருந்தன.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாக்ஷி மாலிக் என்ற பெண்மணி நேற்று முன்தினம் புதன்கிழமை நடந்த, மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் – அதுவும் இந்தியாவுக்கு முதல் பக்கம் – பெற்றுத் தந்திருப்பதுதான்!