Home Featured கலையுலகம் அறிவிப்பாளர் முதல் தயாரிப்பாளர் வரை – பால கணபதியுடன் பிரத்யேக நேர்காணல்!

அறிவிப்பாளர் முதல் தயாரிப்பாளர் வரை – பால கணபதியுடன் பிரத்யேக நேர்காணல்!

1098
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 2012 அஸ்ட்ரோ ‘யுத்த மேடை’ நிகழ்ச்சி.. களையான முகமும், கதாநாயகனுக்கே உரிய வாட்டசாட்டமான தோற்றமும், குறிப்பாக அனைவரையும் கவரும் அழகிய தமிழில், தெளிவான உச்சரிப்போடும் அறிவிப்பாளராக வலம் வந்து, “யார் இந்த இளைஞர்?” என அனைவரையும் ஆச்சரியத்தோடு பார்க்க வைத்தவர் தான் பால கணபதி வில்லியம்.

BGWஅதன் பின்பு, அஸ்ட்ரோவில் எத்தனையோ தொலைக்காட்சிப் படங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் எனத் தோன்றி, தனது திறமையால், பெரியவர் முதல் சிறியவர் வரை தனது ரசிகர்களாக ஆக்கிக் கொண்டவர்.

அடுத்ததாக, அவரது பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது, அஸ்ட்ரோ விண்மீன் எச்டி-யில் ஒளிபரப்பான, ‘ரசிக்க ருசிக்க’ நிகழ்ச்சி.

#TamilSchoolmychoice

அந்நிகழ்ச்சியில் இடம்பெறும் உணவுகளையும், உணவுக்கடைகளையும் அறிந்து கொள்ள ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது போல், பால கணபதியின் ஸ்டைலான தோற்றத்தையும், கலகலப்பான பேச்சையும் கேட்க ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத் தான் செய்தது.

இப்படியாக, அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர் என்று வலம் வந்த பால கணபதி வில்லியம் தற்போது பிஜிடபிள்யூ என்ற நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் பல இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்தும் வருகின்றார்.

அவருடன் செல்லியல் நடத்திய பிரத்யேக நேர்காணல் இதோ:-

செல்லியல்: பிஜிடபிள்யூ பற்றி சொல்லுங்க பாலா?

BGW8பாலா: பால கணபதி வில்லியம் என்ற என் பெயரைச் சுருக்கி தான் பிஜிடபிள்யூ என்று வைத்திருக்கிறேன். என் பெயர் ரொம்ப நீளமா இருக்குறதுனால, இண்டஸ்ட்ரில எல்லோரும் எளிமையா கூப்பிட வசதியாக இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தேன்.

என்ன பெயர் வைக்கலாம் என்று கிட்டத்தட்ட ஒரு வருஷம் யோசித்து இந்தப் பெயரை வைத்தேன். அதோடு, பிஜிடபிள்யூ என்ற பெயரை எதிர்காலத்தில் ஒரு பிராண்ட் ஆக்க வேண்டும் என்ற ஒரு யோசனையும் இருந்தது. அதனால் கமர்சியலாகவும் இருக்க வேண்டும், கார்பரேட் பெயர் மாதிரியும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அதைத் தேர்ந்தெடுத்தேன்.

செல்லியல்: பிஜிடபிள்யூ ஸ்டூடியோஸ் மூலமாக தற்போது புதியவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி வருவது பற்றி?

பாலா: 2012 -ல் தொலைக்காட்சிக்கு வந்ததற்குப் பிறகு, ஒரு வருடம் எந்த ஒரு பிராஜக்டும் பண்ணவில்லை. காரணம் அந்த ஒரு வருடம் எனக்கு ஏற்ற மாதிரி பண்ணக் கூடிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. அதனால் அந்த சமயத்தில் நமது கலைத்துறையின் போக்கை கவனித்துக் கொண்டும், கற்றுக் கொண்டும் இருந்தேன்.

மலேசியாவில் நிறைய இளம் திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் இணைத்து ஏதாவது நல்ல விசயங்களை பண்ண வேண்டும் என்று நினைத்தேன். எதன் மூலமாக அதனைப் பண்ண வேண்டும்?, எப்படி அதை வர்த்தக ரீதியாக்குவது? போன்ற விசயங்களை ஆராய்ந்து வந்தேன்.

ஊடகத்தைப் பொறுத்தவரையில் பல தடைகள் இருக்கத் தான் செய்கின்றது. அவற்றை உடைத்து வெளியே வருவதற்கு வழிகள் தேட வேண்டும்.  உதாரணமாக, தமிழகத் திரைப்படங்களில் ஒரு காலத்தில் மனோ, சித்ரா போன்ற பாடகர்கள் தான் தொடர்ந்து பாடி வந்தார்கள். ஆனால் இன்றைய சூழலில் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் வந்து பல புதிய பாடகர்களுக்கு வாய்ப்புகள் வருகிறது இல்லையா? அது போல் இங்கும் நமது இண்டஸ்ட்ரி வளரும் போது இன்னும் அதிகமான வாய்ப்பு திறமையானவர்களைச் சென்றடையும்.

BGW9அந்த வகையில், பிஜிடபிள்யூ ஸ்டூடியோஸ் மூலமாகப் பலருக்கு வாய்ப்புகளை வழங்கி வருகின்றோம். நிறைய மியூசிக் வீடியோஸ் செய்திருக்கிறோம். நிறைய தயாரிப்புகளையும் செய்து வருகின்றோம். இப்போது லேட்டஸ்டாக ‘மாங்கல்யம் தந்துனானேனா’ என்ற ஒரு தொலைக்காட்சிப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். அதில் பல புதியவர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறோம். முற்றிலும் இளம் கலைஞர்கள் இணைந்து இந்த தொலைக்காட்சிப் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

இவர்கள் அனைவரும் இன்றைய தலைமுறைக் கலைஞர்கள் இவர்கள் இன்னும் தொலைக்காட்சிகளில் தங்களது திறமையை நிரூபிக்கவில்லை. இது தான் முதன்முறை அவர்கள் தொலைக்காட்சியில் தங்களது திறமையை நிரூபிக்கவுள்ளார்கள். இவர்களின் திறமை நிரூபிக்கப்பட்டுவிட்டால், பின் இது போல் இன்னும் பல இளம் திறமைசாலிகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அது தான் என்னுடைய நோக்கமும்.

செல்லியல்: ‘ரசிக்க ருசிக்க’ அனுபவம்?

BGW6பாலா: ‘ரசிக்க ருசிக்க’ என்னோட மார்கெட் வேல்யூவை இரட்டிப்பு ஆக்கிய ஒரு நிகழ்ச்சி. துவண்டு போயிருக்கும் நேரத்தில் கிடைத்த நிகழ்ச்சி அது. எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு டவுன்ஃபால் வரும். அப்படி ஒரு நிலை எனக்கு வந்து கவலையடைந்திருந்த நேரத்தில் கிடைத்தது தான் அந்த நிகழ்ச்சி. நிறைய உழைப்பையும், முயற்சியையும், காதலையும் போட்டு செய்ய வேண்டியிருந்தது.

அந்நிகழ்ச்சி பண்ணும் போதே நான் இயக்குநர், தயாரிப்பாளரிடம் இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய வரவேற்பை அடையும் என்று சொன்னேன். எதிர்பார்த்தை விட அதிகமாகவே வெற்றியடைந்தது. அதனால் தான் இரண்டாம் பாகம் செய்தோம்.

மலேசியாவில் எங்க போனாலும் என் பெயரை விட அந்தத் தலைப்பு மக்கள் மனதில் அதிகமாகவே பதிந்திருந்தது. குறிப்பாக, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. நிறைய பெற்றோர் எனக்கு மெசேஜ் பண்ணுவார்கள். எங்க குழந்தைக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் .. பிறந்தநாள் கொண்டாடுகிறோம் வீட்டு வாங்க.. இப்படியெல்லாம் மெசேஜ் பண்ணுவார்கள். எனது நிகழ்ச்சி வரும் போது அந்தக் குழந்தைகளும் என்னைப் போலவே ஆடை உடுத்தி பைக் ஓட்டிக் கொண்டிருப்பார்கள்.

சீனர்கள், மலாய்க்காரர்கள் எனப் பாரபட்சமின்றி எல்லா மக்களிடமிருந்தும் அன்பைப் பெற்றுக் கொடுத்தது ரசிக்க ருசிக்க.

செல்லியல்: சிங்கப்பூர் கலைத்துறையில் உங்களது நட்பு வட்டாரம் எப்படி இருக்கிறது?

BGW2பாலா: சிங்கப்பூர் நாடகம் ஒன்று மலேசியாவில் படப்பிடிப்பு நடத்திய போது நான் ஒரு சின்ன ரோலில் நடிக்கத் தான் போனேன். ஆனால் தயாரிப்பாளர் என்னைப் பார்த்துவிட்டு எனக்கு அதில் பெரிய ரோல் கொடுத்தார். அதன் பின்பு தயாரிப்பாளருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அப்படி தான் ‘அண்ணாமலை’ தொடரில் எனது பங்களிப்பு அதிகமாக இருந்தது.

அதன் பின்பு அங்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். மலேசியாவில் இருந்து போவதால், என்னை யாருக்கும் அங்கு தெரிந்திருக்காது என்று நினைத்தேன். ஆனால் அங்கு என்னைப் பற்றியும், எனது நிகழ்ச்சிகள் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். பொது இடங்களில் கூட மக்கள் என்னைப் பார்க்கும் போது அடையாளம் கண்டு வந்து பேசினார்கள்.

BGW1இன்னொரு முக்கியமான விசயம் சிங்கப்பூர் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்கும் போது, அது ஜோகூர் பாருவில் உள்ள மக்களும் பார்க்க முடியும் என்பதால் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

செல்லியல்: உங்களுடைய சினிமா முயற்சிக்கு உங்கள் குடும்பதினரின் ஒத்துழைப்பு பற்றி?

BGW5பாலா: என்னுடைய குடும்பத்தில் யாரும் கலைத்துறையில் இல்லை. ஆரம்பத்தில் நான் இந்தத் துறைக்கு வரும் போது எனது குடும்பத்தில் யாரும் என்னை ஊக்கப்படுத்தவும் இல்லை அதே சமயத்தில் தடுக்கவும் இல்லை.

எந்த முடிவாக இருந்தாலும் நானே சொந்தமாக எடுக்கும் சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார்கள். 6 வயசிலிருந்தே நான் அப்படி தான். அம்மா என்னை சொந்தமாக முடிவெடுக்கச் சொல்லுவார்கள். கலைத்துறைக்கு நான் வந்தது அப்படி தான். நானே சொந்தமாக முடிவெடுத்து, நடிகர் தேர்வுக்கெல்லாம் போய் தான் என்னை வளர்த்துக் கொண்டேன்.

கெடாவிலிருந்து இங்கு கோலாலம்பூருக்கு வந்து கலைத்துறையில் ஈடுபடத் தொடங்கியவுடன் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தான் வீட்டுச் செல்வேன். முதலில் அவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் நான் தொலைக்காட்சிகளில் வரத் தொடங்கியவுடன் என்னைப் புரிந்து கொண்டார்கள்.

செல்லியல்: உங்களை முழு நீளத் திரைப்படத்தில் எப்போது பார்க்கலாம் ?

பாலா: எனக்கும் ரொம்ப ஆசை. திரையரங்குகளுக்கு முன் பெரிய பெரிய போஸ்டர் வைத்திருப்பார்கள். அதையெல்லாம் பார்க்கும் போது, எப்ப நம்ம போஸ்டர் இது மாதிரி வரும் என்று ஒரு ஆதங்கம் இருந்து கொண்டே இருக்கும். ரெண்டு மூனு  பிராஜக்ட்ஸ் பண்ணேன். சிலது கைவிடப்பட்டது. சிலது இன்னும் பாதியில் நிற்கிறது. விவாகரத்து திரைப்படத்தில் நான் ஒரு சின்ன ரோலில் தான் நடித்திருந்தேன்.

இப்படியாக எனக்கு இன்னும் சொல்லிக் கொள்ளும் படியான ஒரு திரைப்படம் அமையவில்லை. அதனால் இப்ப நானே சொந்தமாக ஒரு திரைப்படம் தயாரிக்கப் போகிறேன்.கதை, திரைக்கதை எல்லாம் முடிவு செய்தாகிவிட்டது.

போன மாதமே படப்பிடிப்புக்கு போயிருக்க வேண்டியது. ஆனால் ‘மாங்கல்யம் தந்துனானேனா’ படப்பிடிப்பு வேலைகள் இருந்ததால், அதனைத் தொடங்க முடியவில்லை. இந்த மாதக் கடைசியில் எனது படத்திற்கான வேலைகள் தொடங்கிவிடும். நானே தயாரித்து, இயக்கி, நடிக்கவுள்ளேன். ஜாஸ்மின் மைக்கேல் உடன் நடிக்கிறார்கள்.

இது ஒரு மிகப் பெரிய பொறுப்பு தான். என்றாலும் ஒரு நல்ல வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் படத்தை உருவாக்குகிறேன். நாலு, ஐந்து தலைப்பு யோசித்திருக்கிறேன். அதில் ஒன்றை முடிவு செய்துவிட்டு அறிவிப்பேன்.

செல்லியல்: இன்னும் 10, 15 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தால், இந்தக் கலைத்துறையில் பிஜிடபிள்யூ என்னவாக இருப்பார்? சிறந்த நடிகரா? சிறந்த இயக்குநரா? அல்லது தயாரிப்பாளரா?

பாலா: உண்மையச் சொன்னா எனக்கு இயக்குநராக வேண்டும் என்பதில் ஆசையே இல்லை. ஒரு கேக் இருக்கிறது என்றால், அதை நான் மட்டுமே ஏன் சாப்பிட வேண்டும்? ஒவ்வொருக்கும் அதில் பங்குகள் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணம். நான் இப்போது தயாரிக்கவுள்ள படத்தை ஏன் நானே இயக்குகிறேன் என்றால், முதலில் செலவைக் குறைக்க, இரண்டாவது நான் பல நாட்களாக இந்தக் கதையை யோசித்து உருவாக்கியிருக்கிறேன். அதை இன்னொரு இயக்குநரிடம் கொடுக்கும் போது அக்கதை அவரது எண்ணத்தில் வேறு மாதிரியாக உருவாகும் வாய்ப்பு உள்ளது.

அந்தக் கதையை நான் பல மாதங்களாக யோசித்து, ஆய்வு செய்து உருவாக்கியிருக்கிறேன். அதை எனது எண்ணத்தின் படி படமாக்கினால் கண்டிப்பாக ஹிட் ஆகுமென்று நான் ஆணித்தரமாகச் சொல்லுவேன்.

எனவே, இன்னும் ஒரு 10, 15 ஆண்டுகளில் நிச்சயமாக நல்ல படங்களையும், நிகழ்ச்சிகளையும் தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளராக இருப்பேன். அதே நேரத்தில் கண்டிப்பாக ஒரு ஸ்டாராக இருப்பேன். வைன் (Whine) மாதிரி .. வயசு ஏற ஏற தான் அதன் தரம் அதிகரிக்கும் என்பதைப் போல் நிச்சயமாக நடிப்புத் துறையில் எனது திறமைகளை மெருகேற்றிக் கொள்வேன்.

செல்லியல்: நிச்சயமாக.. பாலா .. உங்களது ஆசைகள், கனவுகள் எல்லாம் நிறைவேறும்.. பிஜிடபிள்யூ நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடங்கி, வாரம் வாரம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணியளவில் பேஸ்புக்கில் உங்களது ரசிகர்களை நேரலையில் சந்திப்பது வரையில் எல்லாவற்றிலும் ஒரு திட்டமும், தனித்துவமும் இருப்பதைப் பார்க்க முடிகின்றது. எனவே.. உழைப்பு என்றுமே வீண் போவதில்லை.. வாழ்த்துகள் என்று கூறி பாலாவிடமிருந்து விடை பெற்றேன்.

BGW7கார்த்திக் ‌‌ஷாமளன் இயக்கத்தில், பால கணபதி வில்லியம் நடித்துள்ள ‘மாங்கல்யம் தந்துனானேனா’ வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி, அஸ்ட்ரோவில் வெளியாகவுள்ளது. அப்படம் அவரது கலைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை. காரணம், கடந்த சில வாரங்களாக அதன் முன்னோட்டத்திற்கே மக்களின் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.

நேர்காணல் – ஃபீனிக்ஸ்தாசன் 

படங்கள்: பிஜிடபிள்யூ பேஸ்புக்