சிங்கப்பூர் – நேற்று திங்கட்கிழமை இரவு காலமான சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26ஆம் தேதி மாலை 4.00 மணியளவில், தேசிய சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் உள்ள, பல்கலைக் கழக கலாச்சார மையத்தில், அரசு மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
மக்களும் பிரமுகர்களும் தங்களின் இறுதி மரியாதை செலுத்துவதற்காக, அவரது நல்லுடல் வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல், வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிவரை, நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைக்கப்படும்.
சிங்கப்பூர் அதிபர், பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் அவரது இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கான நேரம் வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை அரசாங்க அதிகாரிகளும், வெளிநாட்டு தூதர்களும் இறுதி மரியாதை செலுத்துவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அரசு மரியாதைகளுடனான இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர் அவரது நல்லுடல் மண்டாய் சுடலையில் அவரது குடும்பத்தார்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் தனிப்பட்ட முறையில் தகனம் செய்யப்படும்.
அவரது இறுதிச் சடங்குகளுக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எஸ்.ஆர்.நாதனுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில், இன்று செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சிங்கப்பூர் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
சிங்கை அதிபர் மாளிகையான இஸ்தானாவில், இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி முதல் அனுதாபச் செய்திகளை பதிவு செய்வதற்கான ஏடுகள் வைக்கப்பட்டிருக்கும். வெளிநாட்டிலுள்ள சிங்கப்பூர் தூதரகங்களிலும் அனுதாபப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
92 வயதான நாதன், சிங்கப்பூரின் நீண்ட கால அதிபராக சேவையாற்றிய பெருமையைப் பெறுகின்றார்.