புக்கிட் மெர்த்தாஜாம் – கடந்த திங்கட்கிழமை தாமான் பாவ் ஜெயாவில், 5 அடுக்கு குடியிருப்பு ஒன்றில், பிடிக்கப்பட்ட 4.2 மீட்டர் நீளம் கொண்ட இராஜ நாகம், காட்டிலிருந்து வந்த பாம்பாக இருக்க வேண்டும் என்கிறார் அதனைப் பிடிக்க உதவியவர்களில் ஒருவரான மொகமட் இசானி ரம்லி.
முன்னாள் பாம்பாட்டியான இசானி ரம்லி, தற்போது இன்சூரன்ஸ் முகவராகப் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், பிடிக்கப்பட்ட இராஜ நாகத்தை ஆய்வு செய்த அவர், அது கூண்டில் வளர்க்கப்பட்ட பாம்பாக இருக்க முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
காரணம், வழக்கமாகக் கூண்டில் வைக்கப்பட்ட பாம்பாக இருந்தால் அதன் வாயில் சில தழும்புகள் இருக்கும் என்றும், அதன் தோல் சுத்தமாக இருக்கும் என்றும் இசானி ரம்லி தெரிவித்துள்ளார்.
ஆனால், தாங்கள் பிடித்துள்ள அந்தப் பாம்பின் வாயில் தழும்புகள் இல்லையென்றும், அதன் தோலில் நிறைய அழுக்குகள் இருப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றின் படுக்கையறை ஜன்னலுக்கு வெளியே அப்பாம்பு தொங்கிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், அக்குடியிருப்புவாசிகள் நான்காவது மாடியில் ஒரு வீட்டில் உள்ள கூண்டு ஒன்றில் இருந்து தான் அப்பாம்பு வெளியேறியிருக்க வேண்டும் என்று கூறியதையடுத்து, பினாங்கு வனத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அங்கு எதுவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 6 கிலோ எடையுள்ள அந்த இராஜ நாகம் காட்டிலிருந்து வந்தது என்ற தெரியவந்துள்ள நிலையில், மேலும் பாம்புகள் படையெடுக்குமோ என அக்குடியிருப்பு வாசிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.