கோலாலம்பூர் – உலகளவில் மக்களைத் தனது தனித்துவமான ருசியால் கட்டி வைத்திருக்கும் அமெரிக்காவின் புகழ்பெற்ற கேஎஃப்சி நிறுவனத்தின் இரகசிய செய்முறைக் குறிப்புகளை அம்பலப்படுத்தி விட்டதாக செய்தி நிறுவனம் ஒன்று கூறி வருகின்றது.
அமெரிக்காவில் கெந்துகி(Kentucky) என்ற இடத்தில் தான் கடந்த 75 ஆண்டுகளுக்கு முதன் முதலாக கேஎஃப்சி கோழி விற்பனை செய்யப்பட்டது. கேஎஃப்சி நிறுவனத்தின் நிறுவனர் ஹார்லாண்ட் சாண்டர்சின் சொந்த ஊரும் அது தான்.
இந்நிலையில், சிகாகோ ட்ரிபூன் (Chicago Tribune) என்ற அமெரிக்க செய்தி நிறுவனம், அண்மையில் அக்கடைக்கு தங்களது செய்தியாளரை அனுப்பியுள்ளது. அங்கு சென்று செய்தி சேகரித்த அவர், சாண்டர்சின் மருமகன் ஜோ லெடிங்டன்னைச் சந்தித்திருக்கிறார்.
அப்போது லெடிங்டன், கையால் எழுதப்பட்ட பழைய செய்முறைக் குறிப்பு ஒன்றைக் காட்டி, “இது தான் அந்த 11 மூலிகை மற்றும் மசாலாக்கள். நாங்கள் இதனை மிகவும் இரகசியமாகப் பாதுகாத்து வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
சிகாகோ ட்ரிபூன் வெளியிட்டுள்ள தகவலின் படி, கேஎஃப்சி சிக்கனின் சுவைக்கு முக்கியக் காரணியாக இருப்பது அதில் கலக்கப்படும் வெள்ளை மிளகு தான் என்கிறது. வெள்ளை மிளகு என்பது கருப்பு நிற மேற்புறத் தோல் நிக்கப்பட்ட மிளகு ஆகும்.
அதோடு, கேஎஃப்சியின் இரகசிய செய்முறைக் குறிப்பை அறிந்து கொண்ட சிகாகோ ட்ரிபூன், அக்குறிப்பின் படி, சிக்கனைப் பொறித்து, உண்மையான கேஎஃப்சி-யுடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ளது.
இரண்டும் கிட்டத்தப்பட்ட வித்தியாசம் காண முடியாத படி ஒரே போல் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கேஎஃப்சி வெளியிட்டுள்ள தகவலில், “இது போல் எத்தனையோ பேர் முயற்சி செய்துவிட்டார்கள். ஆனால் எங்களது இரகசிய செய்முறைக் குறிப்புகள் இன்னும் பாதுகாப்பாகவே தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.