Home வணிகம்/தொழில் நுட்பம் வாடிக்கையாளருக்குத் தவறுதலாக எலியைப் பொரித்துக் கொடுத்த கேஎஃப்சி!

வாடிக்கையாளருக்குத் தவறுதலாக எலியைப் பொரித்துக் கொடுத்த கேஎஃப்சி!

861
0
SHARE
Ad

KFC-fried-rat (1)கலிஃபோர்னியா, ஜூன் 17 – அமெரிக்காவில் புகழ்பெற்ற ‘கேஎஃப்சி’ (KFC) உணவகத்தில் மதிய உணவைப் பெற்ற வாடிக்கையாளர் ஒருவர், அதனைத் திறந்து பார்த்தபொழுது கோழிக்குப் பதிலாகப் பொரித்த எலி இருந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள சங்கிலித் தொடர் உணவகமான கென்டகி ஃபிரைடு சிக்கன் (கேஎஃப்சி), துரித உணவுகளுக்கும் குறிப்பாக ஃபிரைடு சிக்கன் எனப்படும் பொரித்த கோழிக்கறி உணவுகளுக்கும் பெரும் பேர் பெற்றுள்ளது. சுத்தம், சுகாதாரம் மற்றும் வாடிக்கையாளரின் நலனை முக்கிய இலக்காகக் கொண்டு செயல்படுவதாக விளம்பரப்படுத்தி வரும் இந்த உணவகத்தில், கலிஃபோர்னியா மாகாணத்தின் வில்மிங்டன் நகரைச் சேர்ந்த டிவோரைஸ் டிக்சன் என்ற வாடிக்கையாளர் தனது மதிய உணவிற்கான உணவுப் பட்டியலை அந்த உணவகத்தில் முன்பதிவு செய்திருந்தார்.

KFC-fried-ratகுறித்த நேரத்தில்  டிக்சனுக்கு அவரின் உணவுப் பொட்டலம் தரப்பட்டது. அதனை எடுத்துக் கொண்டு அவர் தனது வீட்டிற்குச் சென்று விட்டார். பின்னர் அதனைத் திறந்து பார்த்த அவர், அந்த உணவில் கோழிக் கறி சற்றே வித்தியாசமான வடிவத்துடன் இருந்ததால் குழப்பமடைந்துள்ளார். ஆரம்பத்தில் டிக்சன் அதனைக் கோழியின் மார்புப் பகுதியாக இருக்கும் என்று எண்ணினாலும், வால் போன்ற அமைப்பு இருந்ததால், அதனை மேலும் ஆராய்ந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது கோழி இல்லை என்றும், பொரித்த எலி என்றும் பின்னர் அறிந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

உடனடியாக டிக்சன் அதனைத் தனது திறன்பேசி மூலம் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்தார். மறுநாள் குறிப்பிட்ட அந்தக் கேஎஃப்சி உணவகத்திற்குச் சென்று தனக்குக் கொடுக்கப்பட்ட உணவில் பொரித்த எலி இருந்த விவரத்தைக் கூறியுள்ளார். அதற்கு அந்த உணவகத்தின் மேலாளர் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். எனினும், சமாதானம் அடையாத டிக்சன் உணவகத்தின் மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க உணவுப் பாதுகாப்புத் துறை இது தொடர்பாக விசாரித்து வருகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டு பற்றி கேஎஃப்சி நிறுவனம் இதுவரை எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.