கோலாலம்பூர் – புதிய வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கவில்லை என்றால், மலேசியா அதன் தனிப்பட்ட அம்சங்களையும், 24 மணி நேர உணவகங்களையும், இழக்க நேரிடும் என்கிறார் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நூருல் ஹசான் சாவுல் ஹம்மெட்.
24 மணி நேர உணவகங்களுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தேவை அதிகம் இருப்பதால், அரசாங்கம் தனது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
“கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரசாங்கம் புதிய கொள்கையை அறிமுகம் செய்ததையடுத்து, நிறைய 24 மணி நேர உணவகங்கள் மூடப்பட்டதோடு, அதன் இயக்கங்களையும் பாதியாகக் குறைத்துக் கொண்டது. தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், தோட்டத் தொழில்கள் மற்றும் மரப் பொருட்கள் உருவாக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டும் விலக்கு அளித்து, உணவகங்களைப் புறக்கணித்தது நியாயமில்லை” என்று நூருல் ஹசான் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிலை நீடித்தால், போதுமான தொழிலாளர்கள் இல்லாமல் உணவக உரிமையாளர்கள் திவாலாக வேண்டிய நிலை ஏற்படும் என்றும், மலேசியாவின் அடையாளங்களில் ஒன்றான 24 மணி நேர உணவகங்கள் பாதிக்கப்படும் என்றும் நூருல் ஹசான் தெரிவித்துள்ளார்.