Home Featured கலையுலகம் அஸ்ட்ரோவின் புத்தம் புதிய தொலைக்காட்சிப் படங்கள் – ஒரு பார்வை!

அஸ்ட்ரோவின் புத்தம் புதிய தொலைக்காட்சிப் படங்கள் – ஒரு பார்வை!

916
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனியார் நிறுவனமான அஸ்ட்ரோவின், வானவில் அலைவரிசையில் ஒளிபரப்பட்டு வரும் நிகழ்ச்சிகள் குறித்து, ஒரு தரப்பினரிடையே பல்வேறு குறை கூறல்களும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், அந்த அலைவரிசையில் ஒளிபரப்பாகிவரும் பல உள்ளூர் தொலைக்காட்சிப் படங்கள் மக்களிடையே அதிக வரவேற்பினைப் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.

மாங்கல்யம் தந்துனானேனா

BGW7நேற்று மலேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிஜிடபிள்யூ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், கார்த்திக் ‌‌ஷமளன் இயக்கத்தில், பால கணபதி வில்லியம்ஸ், ரினிதா வீரய்யா, லிங்கேஸ், குபேந்திரன் உள்ளிட்ட கலைஞர்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ‘மாங்கல்யம் தந்துனானேனா’ என்ற தொலைக்காட்சிப் படம் மக்களிடையே பெரிதும் வரவேற்பினைப் பெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice

குறிப்பாக, இளைஞர்கள் பெரிதும் விரும்பியுள்ள அத்தொலைக்காட்சிப் படம் குறித்த பாராட்டுகள், இன்று பேஸ்புக் பக்கமெங்கும் நிறைந்து காணப்படுகின்றது.

முற்றிலும், இளம் கலைஞர்கள் பங்களிப்பில் உருவாகியுள்ள இத்தொலைக்காட்சிப் படத்தில் பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வர்மன் இளங்கோவன் என்ற இளம் கலைஞரின் இசை மிகவும் பேசப்பட்டு வருகின்றது.

பிஜிடபிள்யூ ஸ்டூடியோஸ் நிறுவனரும், நடிகருமான பால கணபதி வில்லியம்ஸ் இது குறித்து கூறுகையில், “மாங்கல்யம் தந்துனானேனா நிச்சயமாக மக்களிடையே அதிக வரவேற்பினைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. சேனலும் அதற்கு ஏற்ற வகையில் நன்றாக விளம்பரப்படுத்தினார்கள். நிறைய உழைப்பைப் போட்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

அவரது கருத்துப்படியே, நேற்று இரவு முதல் அத்தொலைக்காட்சிப் படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகின்றது.

தாமரை

Thamaraiசினிபிரேம் புரோடக்சன்ஸ் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனம் தயாரிப்பில், ‘தாமரை’ என்ற புதிய தொலைக்காட்சிப் படம் உருவாகியுள்ளது. இத்தொலைக்காட்சிப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 3 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதற்காக இங்கிருந்து மலேசியக் கலைஞர்கள் இந்தியாவிற்குச் சென்று அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

மலேசியக் கலைத்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவரும், தமிழ்நாட்டில் ‘புது புது அர்த்தங்கள்’, ஹாலிவுட் படமான இந்தோசீனா உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவருமான திவாகர் சுப்பையா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்தொலைக்காட்சிப் படம் விரைவில் அஸ்ட்ரோவில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதற்கு முன்பு, சினிபிரேம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில், ‘நினைவுகள் மறக்கிறதே’, ‘டிக்கெட் இல்லையா’, ‘புத்தாண்டுக்கு வந்த பெருச்சாளி’ உள்ளிட்ட தொலைக்காட்சிப் படங்கள் அஸ்ட்ரோவில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தொலைக்காட்சிப் படம் குறித்து இயக்குநர் திவாகர் சுப்பையா கூறுகையில், “அஸ்ட்ரோவுக்கு இது நான்காவது டெலிமூவி. தாமரை கதைப்படி தமிழகத்தில் இருந்து ஒரு பெண்ணை இங்கே திருமணம் செய்து அழைத்து வருகிறார்கள். அதன் படி, முதலில் பினாங்கில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தின் சூழ்நிலைகளை காட்சிகளாக்க வேண்டும் என்று நான் விரும்பியதால், அங்கு சென்று படப்பிடிப்பு நடத்தினோம். அடுத்து 8 நாட்கள் கேமரன் மலையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சுமார் 20 உள்ளூர் கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.

பயோகிராபி

Anandhaகானாபூமி செண்ட்ரியான் பெர்ஹாட் தயாரிப்பில், ‘வெண்ணிற இரவுகள்’ பிரகாஷ் ராஜாராம் இயக்கத்தில், டிஎச்ஆர் ஆனந்தா, அப்பே ஆறுமுகம் உள்ளிட்ட மலேசியக் கலைஞர்கள் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள, ‘பயோகிராபி’ என்ற தொலைக்காட்சிப் படம் மிக விரைவில் அஸ்ட்ரோ வானவில்லில் வெளியாகவுள்ளது.

இதற்கு முன்பு, ஷைன் என்டர்டெயின்மண்ட் தயாரிப்பில், பிரகாஷ் ராஜாராம் இயக்கத்தில் உருவான ‘யார் சொல்வது’, ‘உன் போல் யாருமில்லை’ போன்ற தொலைக்காட்சிப் படங்கள் மக்களிடையே பெற்ற வரவேற்பினையடுத்து, ‘பயோகிராபிக்கு’ எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

அப்பே ஆறுமுகம் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த ‘உன் போல் யாருமில்லை’ தொலைக்காட்சிப் படம் 2014 ஆண்டு, தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக அஸ்ட்ரோவில் ஒளிபரப்பானது. தந்தையின் பாசத்தையும், வலியையும் உணர்த்தும் இத்தொலைக்காட்சிப் படம் அதிக பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில், ‘பயோகிராபி’ குறித்து பிரகாஷ் ராஜாராம் கூறுகையில், வரும் செப்டம்பர் மாதம் இத்தொலைக்காட்சிப் படம் வெளியாகவிருப்பதாகத் தெரிவித்தார். ‘

பொம்மை

‘அண்டர் கவர் ராஸ்கல்’, ‘திட்டம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரான, வி.நாகராஜ் இயக்கத்தில், ஜாஸ்மின் மைக்கேல் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ‘பொம்மை’ என்ற புதிய தொலைக்காட்சிப் படம் படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்று வெளியாகக் காத்திருக்கின்றது.

Bommaiஇதற்கு முன்பு மெகாமூவி நிறுவனம் சார்பில், அஸ்ட்ரோவுடன் இணைந்து பணம், தீபாவளிப் பயணம், மர்ம கேமரா உள்ளிட்ட தொலைக்காட்சிப் படங்களை உருவாக்கிய நாகராஜ், தற்போது ஒரு பொம்மையைச் சுற்றி நடக்கும் திகில், மர்மம் நிறைந்த கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஜாஸ்மின் மைக்கேலுக்கும், அந்த பொம்மைக்கும் இடையே நடக்கும் சில மர்ம நிகழ்வுகள் சுற்றியே கதை நகரும் என்கிறார் இயக்குநர் நாகராஜ்.

ஜாஸ்மின் மைக்கேலுடன் கே.கே.கானா, லிங்கேஸ், விழுதுகள் அறிவிப்பாளர் நதியா ஜெயபாலன் உள்ளிட்ட கலைஞர்களும் நடித்துள்ளனர்.

மிக விரைவில் இத்தொலைக்காட்சிப் படம் அஸ்ட்ரோவில் வெளியாகவுள்ளது.

இதனிடையே, இது போன்ற தொலைக்காட்சிப் படங்கள், மலேசியத் திரைப்படங்கள் உள்ளிட்டவைகளை அந்தந்தத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அதிகாரப்பூர்வமாகப் பெறும் அஸ்ட்ரோ நிறுவனம், அவைகளை அஸ்ட்ரோ வானவில், அஸ்ட்ரோ வெள்ளித்திரை ஆகிய அலைவரிசைகளில் ஒளிபரப்பி வருகின்றது.

இந்நிலையில், அஸ்ட்ரோவில் இது போன்ற தொலைக்காட்சிப் படங்களுக்கான வாய்ப்புகளைப் பெறுவது குறித்து மேற்சொன்ன தயாரிப்பு நிறுவனங்களிடம் எழுப்பிய கேள்விக்கு, முறைப்படி பதிவு பெற்ற நிறுவனத்தின் மூலம், நல்ல கதையுடன், சரியான திட்டத்துடனும் அஸ்ட்ரோவை அணுகினால், நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும் என்பதே அவர்களின் கருத்தாக இருக்கின்றது.

– ஃபீனிக்ஸ்தாசன்