வெல்லிங்டன் – இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்கரைகளை 7.1 புள்ளிகள் வலுவான நிலநடுக்கம் தாக்கி அதிர வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கடற்கரையோரங்களையும், நீர்நிலைகளையும் தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
கடலுக்கடியில் உருவான இந்த நிலநடுக்கத்தால் சிறிய அளவிலான சுனாமியும் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இதுவரை உடனடி பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
பூமிக்கு அடியில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு தோன்றிய இந்த நிலநடுக்கம் நியூசிலாந்தின் வடக்கு தீவின் கிழக்குக் கடற்கரையில், வெல்லிங்டன் நகரிலிருந்து வட கிழக்கு நோக்கி 569 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டது.
சுனாமிக்கான அபாய அறிகுறிகள் தென்படுவதாக அறிவித்துள்ள நியூசிலாந்தின் பொது தற்காப்பு மற்றும் அவசர நிர்வாக அமைச்சு முழுமையான சுனாமி உருவாக மேலும் பல மணி நேரங்கள் ஆகலாம் என்பதால் பாதிக்கப்பட்ட இடங்களில் பொதுமக்கள் படகில் செல்வதையோ சுற்றுப் பயணம் செல்வதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகள் சில நூறு கிலோமீட்டர்கள் தள்ளியுள்ள ஆக்லாந்து நகரின் மக்களையும் இரவுத் தூக்கத்திலிருந்து விழித்தெழச் செய்துள்ளது.
2011-இல் நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் என்ற பகுதியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம், 185 பேர்களைப் பலி கொண்டதோடு, ஆயிரக்கணக்காணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது.