கோலாலம்பூர் – மொசாம்பிக் தீவின் கடலோரப் பகுதியில், அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று விமானப் பாகங்களை அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.
அவற்றில் மிகப் பெரிய முக்கோணப் பாகம் ஒன்றில் சிவப்பும், வெள்ளையும் கலந்த நிறத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மொசாம்பிக் தீவின் தென் பகுதி ஒன்றில் இருந்து அப்பாகத்தைக் கண்டறிந்ததாகவும் மொசாம்பிக் வான்போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரையில் கண்டறியப்பட்ட பாகங்களிலேயே வண்ணங்கள் கொண்ட முதல் பாகம் இது தான் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, அப்பாகத்தில் உள்ள குறியீடு ஒன்றின் மூலம் அது எந்த விமானத்தைச் சேர்ந்தது என்று விரைவில் உறுதி செய்துவிடலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மொசாம்பிக்கின் வேறு ஒரு பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாகங்களையும் நேற்று அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இம்மூன்று பாகங்களும் மலேசிய விசாரணை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.