பெங்களூரு – காவிரி நீர் விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்த வழக்கில், நேற்று தமிழகத்திற்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதையடுத்து, தமிழக – கர்நாடக எல்லைப் பகுதிகளில் பதற்ற நிலை நீடித்து வருகின்றது.
இரு மாநிலங்களுக்கு இடையில் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், 10 நாட்களுக்கு, விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு குறித்து கர்நாடகாவைச் சேர்ந்த எம்.பிக்களுடன் முதலமைச்சர் சித்தராமையா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
பெங்களுருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற ஆணையின் நகல்கள் கிடைத்த உடன், சட்ட நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் ஆலோசனை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு கடந்த ஜூலை 23-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், “நடப்பு பாசன ஆண்டில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தமிழகத்துக்கு தரவேண்டிய மீதமுள்ள 50.052 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரியில் நாள்தோறும் 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், காவிரி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு 3 நாட்களில் அணுக வேண்டும் என்றும், தங்களது கோரிக்கையை தமிழகம் 3 நாட்களில் குழுவிடம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.