Home இந்தியா தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!

தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!

837
0
SHARE
Ad

சென்னை: தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்தது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டன . இந்த நான்கு மாநிலங்களும் இவ்விரு அமைப்புகளுக்கும் தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்துள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை இரண்டு முறை கூடி இருக்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி கூடியது. ஒழுங்காற்று குழு கூட்டம் கடைசியாக 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதால் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே சமாளிக்க முடியும் என தமிழக அதிகாரிகள் வாதிட்டனர். ஆயினும், அதுபற்றி அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே, சமீபத்தில் கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா தமிழகம் வந்திருந்தபோது, காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட இயலாது என்றும், அதிக மழை பெய்தால் மட்டுமே திறந்து விட முடியும் என்றும் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் மசூத் உசேன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி தண்ணீரை இந்த மாத இறுதிக்குள் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.