Home Featured நாடு மலேசியாவில் தாக்குதல் நடத்த சிரியாவில் இருந்து உத்தரவு – புக்கிட் அமான் கவலை!

மலேசியாவில் தாக்குதல் நடத்த சிரியாவில் இருந்து உத்தரவு – புக்கிட் அமான் கவலை!

723
0
SHARE
Ad

Ayob Khanகோலாலம்பூர் – சிரியாவில் இருக்கும் இந்தோனிசிய தீவிரவாதிகள், ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த மலேசிய அனுதாபிகளைத் தூண்டிவிட்டு, நாட்டில் குறிப்பிட்ட இடங்களில் தாக்குதலை நடத்தத் திட்டமிடுவதாக மலேசியக் காவல்துறை கவலை கொள்கிறது.

இந்தோனிசியாவைச் சேர்ந்த தீவிரவாதி பாஹ்ரும் ஷா, மலேசிய அரசாங்கம், பாதுகாப்புப் படைகள் ஆகியவற்றில் தாக்குதல் நடத்துமாறு தனது அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக புக்கிட் அமானைச் சேர்ந்த தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை, ஐஏசிஎஸ்பி ஆசியான் பாதுகாப்புக் கருத்தரங்கில் புக்கிட் அமான் சிறப்புப் பிரிவின் தலைமை துணை ஆணையர் டத்தோ ஆயோப் கான் பேசுகையில், இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஹ்ரும் நிறைய நிதி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“நிதி இருந்தால் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்த முடியும். இதற்கு முன்பு அல்கொய்தாவை எடுத்துக் கொண்டால், பாலி குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட நிதி, ஆப்கானிஸ்தானில் இருந்து மலேசியாவிற்குள் வந்துள்ளது.”

“ஒருவேளை சிரியாவில் இருந்து நிதி வந்தால், குறுகிய காலத்தில், அவர்களால் மிகப் பெரிய தாக்குதலை நடத்த முடியும். அதை எண்ணி தான் நாங்கள் கவலையடைகின்றோம். அவர்களின் தொடர்புகளை நாங்கள் துண்டிக்க வேண்டும்” என்று ஆயோப் தெரிவித்துள்ளார்.

ஜகார்த்தா போஸ்ட் வெளியிட்டுள்ள தகவலின் படி, பாஹ்ரும் ஷா என்பவன் கத்திபா நூசாந்தாரா அமைப்பின் கமாண்டர் என்று நம்பப்படுகின்றது. இந்தோனிசியர்கள் மற்றும் மலேசிய ஐஎஸ் போராளிகளைக் கொண்ட அந்த அமைப்பு கடந்த 2014-ம் ஆண்டின் இறுதியில் உருவானது.

துணை ஆணையர் ஆயோப் வெளியிட்ட தகவலின் படி, பாஹ்ருன் நாயிம் மற்றும் அபு ஜண்டால் ஆகிய இரு இந்தோனிசியப் போராளிகள் தான் இத்தாக்குதலை நடத்த உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகின்றது.

கடந்த ஜூன் மாதம், பூச்சோங் மோவிடா இரவு விடுதியில், ஐஎஸ் அமைப்பு முதல் முறையாக தனது தாக்குதல் முயற்சியில் வெற்றிபெற்றதாக காவல்துறை கூறுகின்றது.

கோலாலம்பூரில் மட்டும் 13 தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 தாக்குதல் உத்தரவுகள் சிரியாவில் இருந்து வந்துள்ளது என்றும் ஆயோப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி, தீவிரவாதத்துடன் தொடர்புடைய 239 பேரை மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.