புத்ராஜெயா – பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் மற்றும் இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி ஆகிய இருவரைப் பற்றி அவதூறான கட்டுரை வெளியிட்டதற்காக, அவர்கள் இருவருக்கும் தலா 200,000 ரிங்கிட் (2 லட்சம் ரிங்கிட்) கொடுக்க வேண்டும் என நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பிரஸ் (மலேசியா) பெர்ஹாட் செய்தி நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் செய்தியாளருக்கு புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் குவான் எங் மற்றும் இராமசாமியின் மேல்முறையீட்டு மனுவை ஒருமனதாக ஏற்றுக் கொண்ட நீதிபதி லிம் யீ லான் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய பென்ச், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜார்ஜ் டவுன் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விலக்கியது.
அதோடு, இவ்வழக்கிற்காக குவான் எங் மற்றும் இராமசாமி உயர்நீதிமன்றத்தில் செலுத்திய சட்ட நடவடிக்கைகளுக்கான செலவீனத் தொகையான 100,000 ரிங்கிட்டையும், இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் அவர்களிடமே திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் அச்செய்தி நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, சர்ச்சைக்குரிய அக்கட்டுரை சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.