புதுடெல்லி – மனிதர்களின் இரத்தம் ஏ,பி,ஓ,ஏபி ஆகிய நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவின் குஜராத்தில் நோயாளி ஒருவருக்கு புது வகையான இரத்தம் இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத்தில் உள்ள பரிசோதனைக் கூடம் ஒன்றில், பரிசோதிக்கப்பட்ட அந்நபரின் இரத்த மாதிரி, வழக்கமாக உள்ள நான்கு வகையிலும் சேராத நிலையில், அதற்கு மருத்துவர்கள் ‘இன்ரா – INRA’ எனப் பெயரிட்டுள்ளனர்.
‘இன்ரா – INRA’ என்ற பெயரில் முதல் இரண்டு எழுத்துகள் இந்தியாவையும், மற்ற இரண்டு எழுத்துகள் அந்நபரையும் குறிக்கின்றது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்நபரின் இரத்த மாதிரி, உலக சுகாதார நிறுவனத்திற்கும் அனுப்பப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, புதுவகையான இரத்தம் கொண்டிருந்த அந்நபர் யாருக்கும் இரத்த தானம் செய்யவோ, இரத்தம் பெறவோ முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் இதுவரை இவரோடு சேர்த்து 7 பேருக்கு புதுவகையான இரத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்: www.india.com