கோலாலம்பூர் – மலேசியாவில் பாதுகாவலர்களாக இதுவரை நேபாளத்தில் இருந்து மட்டுமே ஆட்களை வேலைக்கு எடுத்து வந்த நிலையில், இனி மேலும் இரண்டு நாடுகளில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுக்கலாம் என துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி அறிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், நேபாளத்தில் இராணுவம் மற்றும் காவல்துறைப் பின்னணி கொண்ட ஆட்கள் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும் காரணத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் சாஹிட் தெரிவித்துள்ளார்.
எனினும், பாதுகாப்பு நிறுவனங்கள், வெளிநாட்டுப் பாதுகாவலர்களோடு, உள்ளூர் பாதுகாவலர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அந்த இரண்டு நாடுகள் எவை? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று சாஹிட் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை இதற்கு அனுமதியளித்துவிட்டது என்றும், அந்த நாடுகள் அதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் நேபாளத்திலிருந்து ‘கூர்கா ஆர்மி’ என்ற பாதுகாவலர் பின்னணி கொண்ட ஆட்கள் மட்டுமே மலேசியாவில் பாதுகாவல் பணிக்கு அமர்த்தப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், தற்போது மேலும் இரண்டு நாடுகளில் இருந்தும் ஆட்களை எடுக்கலாம் எனப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், அவை இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளாக இருக்கலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.