Home கருத்தாய்வு வேதமூர்த்தியின் உண்ணாவிரதப் போராட்டம் நடப்பு சூழ்நிலைக்கு ஏற்புடையதா?

வேதமூர்த்தியின் உண்ணாவிரதப் போராட்டம் நடப்பு சூழ்நிலைக்கு ஏற்புடையதா?

622
0
SHARE
Ad

Hindrafமார்ச் 19 – ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி, இந்திய சமுதாயம் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குரிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதையும் அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தும் வகையில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி முதல் பச்சைத் தண்ணீர் மட்டும் அருந்திக்கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார் என்பது நாடறிந்த செய்தி.

ஹிண்ட்ராப் முன்வைத்துள்ள அடுத்த ஐந்தாண்டுகளுக்கான இந்திய சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் திட்ட வரைவினை தேசிய முன்னணி அல்லது மக்கள் கூட்டணி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் வேதமூர்த்தியின் போராட்டத்தின் முக்கிய நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் தாக்கம் உண்மையில் சம்பந்தப்பட்ட கட்சிகளையோ அல்லது சம்பந்தப்பட்ட மக்களையாவது சென்றடைந்ததா என்றால் இல்லை என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்து.

#TamilSchoolmychoice

வேதமூர்த்தியின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க  மற்ற கட்சிகளைச் சேர்ந்த இந்தியத் தலைவர்கள் கூட முன்வரவில்லயே ஏன்?

ஹிண்ட்ராப்பின் மற்ற தலைவர்கள் கூட – முன்னாள் தலைவர்கள் கூட அவருக்கு ஆதரவாக இதுவரை அறிக்கையும் விடவில்லை. இந்த போராட்டத்திலும் பங்கு கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹிண்ட்ராப்பின் போராட்ட காலங்களில் பக்கம் பக்கமாக எழுதிய பத்திரிக்கைகளெல்லாம் கூட இப்போது அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.

ஹிண்ட்ராப் இயக்கம்

கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹிண்ட்ராப் இயக்கம் நடத்திய வரலாற்றுப்  பேரணியில் ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் இணைந்தனர். அப்பேரணி இந்தியர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தையும், ஹிண்ட்ராபின் மேல் அளவுகடந்த நம்பிக்கையையும் விதைத்தது.

அரசாங்கத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்த்த அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற பேரணிதான் 2008 பொதுத் தேர்தலில் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது.

ஆனால் இன்று அவ்வியக்கத்தின் தலைவர் வேதமூர்த்தி கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக இந்திய மக்களோ அல்லது மற்ற அரசியல் கட்சிகளிலுள்ள இந்தியத் தலைவர்களோ முன்வரவில்லை.

மேலும்  அவரது கோரிக்கை என்னவென்று கேட்கக் கூட தேசிய முன்னணி அரசோ அல்லது மக்கள் கூட்டணி கட்சிகளோ இதுவரை முன் வரவில்லை என்பதே கசப்பான உண்மை.

மற்ற கட்சிகளைச் சேர்ந்த இந்தியத் தலைவர்கள் ஹிண்ட்ராப் இயக்கத்திற்கு எதிராக சொல்லும் ஒரே கருத்து, இந்திய மக்களுக்காகப் போராடும் மற்ற அமைப்புக்களோடும் மற்ற சிறுபான்மை இனங்களுக்கான அமைப்புக்களோடும் தன்னை இணைத்துக் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதை விடுத்து, தன்னோடு யாரையும் சேர்த்துக்கொள்ளாமல் தன்னிச்சையாக செயல் படுவதையே ஹிண்ட்ராப் விரும்புகிறது என்பதுதான்.

அதுமட்டுமல்லாமல், தாங்கள்தான் இந்திய மக்களின் துயர் துடைக்க வந்த ஒரே ஏகபோக இயக்கம் என்பதைப் போல் ஏகபோக உரிமை கொண்டாடுவதாலும், இந்தியர்களுக்கான எந்தவித சலுகைகளும் தங்களின் அங்கீகாரத்தோடுதான் நடைபெற வேண்டும் என்ற நோக்கிலும் செயல்படுவதால் ஹிண்ட்ராப்பிலிருந்து மற்ற தலைவர்கள் கொஞ்சங் கொஞ்சமாக அதன் பாதையிலிருந்து விலக ஆரம்பித்தார்கள்.

இந்திய மக்களின் சமூக, அரசியல் வளர்ச்சிக்காகப் போராடி வந்த ஹிண்ட்ராப், அதன் பின் வந்த ஆண்டுகளில் தன்னை ஒரு அரசியல் கட்சியாக உருமாற்றும் எண்ணத்துடன் செயல்படத்தொடங்கியது என்றும், இதனால் இந்திய மக்கள் ஹிண்ட்ராப் இயக்கத்தின் மேல் இருந்த ஆர்வத்தைத் துறந்து எதிர்கட்சிகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்ததாகவும் அரசியல் நோக்கர்கள் ஹிண்ட்ராப்பின் செல்வாக்கு சரிவிற்கான காரணங்களாகக் கூறுகிறார்கள்.

உண்ணாவிரதம் மூலம் வேதமூர்த்தி உணர்த்த விரும்புவது என்ன? அதை வேறு விதமாக சொல்ல முடியாதா?

உண்ணாவிரதத்தின் நோக்கம் குறித்து வேதமூர்த்தி, மற்ற அரசியல் கட்சிகளுக்கு உணர்த்த நினைப்பது என்னவென்றால், இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மக்கள் வாழும் மலேசியாவில், 5 லட்சம் மக்கள் மட்டுமே ஓரளவு வசதி படைத்தவர்களாக இருகிறார்கள் எஞ்சியிருக்கும் 15 லட்சம் மக்கள் அடிப்படை வாழ்வாதாரங்கள் கூட இல்லாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர் என்பதுதான்.

மேலும் மலேசியா சுதந்திரம் அடைந்த பிறகு 12 பொதுத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்தும் ஜனநாயக ஆட்சியில், தேசிய முன்னணி அரசோ  அல்லது மக்கள் கூட்டணியோ  இந்திய மக்களின் வளர்ச்சிக்காக எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை என்பதுதான் வேதமூர்த்தியின் வாதம்.

மேலும் காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் பல இந்தியர்கள் சிறையில் மர்மான முறையில் இறப்பது, காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்படுவது போன்ற மனித உரிமை மீறல்கள் இந்தியர்களுக்குத்தான் அதிகம் நடந்தேறியுள்ளன.

இது போன்ற மனித உரிமைகள் இந்தியர்களுக்கு மீறப்பட்டுள்ளதை அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  மேலும் இந்திய மக்களின் வளர்ச்சிக்குப் போராடும் தனி அமைச்சு உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்திருக்கின்றார்.

உண்ணாவிரதம் சரியான தீர்வாகுமா?

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில்,இனவாரியான கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக இது போன்ற உண்ணாவிரதங்களை மேற்கொள்வது ஆரோக்கியமான அரசியல் செயலாகுமா?

அடையாள உண்ணாவிரதம் அல்லது ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால், இப்படி நாள் கணக்காக எந்தவித குறிப்பிட்ட இலக்கும் இன்றி உண்ணாவிரதம் என்பது ஏற்புடையதா?

சுதந்திர போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி போன்றோர் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டனர், காரணம் அந்நியர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் அவ்வாறு செய்தனர்.

ஆனால் ஹிண்ட்ராப்பின் கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு அரசியல் அணிகளில் ஏதாவது ஒன்று தங்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்பதும் அதுவரை உண்ணாவிரதப் போராட்டம் என்பதும் பிரச்சனைக்குத் தீர்வாகாது.

எனவே, வேதமூர்த்தி அவர்களே! உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி விட்டீர்கள்.உங்களின் கோரிக்கைகளின் தாக்கத்தை அனைவருக்கும் புரிய வைத்து விட்டீர்கள். இனியும் உண்ணாவிரதத்தை தொடராமல் கைவிடுங்கள்.

உங்களின் போராட்டங்களையும், சிந்தனைகளையும் வேறு வகையிலான போராட்ட களங்களுக்கு ஏற்றதாக மாற்றியமையுங்கள்.

நீங்கள் முன்வைப்பதுதான் சரியான கோரிக்கை என்று விடாப்பிடியாக இருக்காமல் மாற்று வழிகளை – மற்றவர்களும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடியுங்கள்.

அல்லது உங்கள் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல புதிய போராட்ட முறைகளோடு விவகாரங்களை அணுகுங்கள் – கையாளுங்கள்.

உங்களின் சேவைகளும் உழைப்பும் இந்திய சமுதாயத்திற்கு இன்னும் நிறையத் தேவைப்படுகின்றது.

எனவே, இன்றைய மலேசிய அரசியல் சூழ்நிலையில் காலத்துக்கு ஒவ்வாத இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றே இப்போதே கைவிடுங்கள்.

இதுவே அனைவரின் வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் ஆகும்!

-பீனிக்ஸ்தாசன்