Home Featured தொழில் நுட்பம் குறுஞ்செயலிகள் மூலம் தகவல் உலகை ஆக்கிரமிக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள்!

குறுஞ்செயலிகள் மூலம் தகவல் உலகை ஆக்கிரமிக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள்!

1445
0
SHARE
Ad

tv-mobile-apps

(அண்மையத் தொழில்நுட்ப மாற்றங்களால், அச்சில் படிப்பதை விட செல்பேசிகளில் செய்திகளைப் படிக்கும் ஆர்வம் அதிகரிப்பு – தொலைக்காட்சி ஊடகங்கள் குறுஞ்செயலி வழி செலுத்தத் தொடங்கியிருக்கும் ஆதிக்கம் – இதனால் அச்சுப் பத்திரிக்கைகள் எதிர்நோக்கும் சவால்கள் – போன்ற அம்சங்களை செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் தனது பார்வையில் வழங்குகின்றார்)

அண்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, செல்பேசிகள், மற்றும் ஐபேட், டேப்லெட் போன்ற கையடக்கக் கருவிகளின் (Mobile devices) வழி செய்திகள் படிக்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருவதாகவும்,  இதன் காரணமாக, அச்சுப் பத்திரிக்கைகளின் ஆதிக்கமும், விற்பனையும் பெருமளவில் சரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 3 ஆண்டுகளில் கையடக்கக் கருவிகளின் பயன்பாடு கட்டம் கட்டமாக அதிகரித்து வந்துள்ளதாகவும், செய்திகளுக்காக அச்சுப் பத்திரிக்கைகளை அமெரிக்கர்கள் படிக்கும் போக்கு குறைந்து வருவதாகவும் இந்த ஆய்வுகள் மேலும் காட்டுகின்றன.

தமிழகப் பத்திரிக்கையாளர் மாலனின் கருத்துகள்

malan-journalistஅண்மையில் தமிழகத்தின் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த பிரபல பத்திரிக்கையாளர் மாலன் (படம்), “எதிர்கால பத்திரிக்கைகள் எப்படியிருக்கும்?” என்ற கேள்விக்கு, “ஓஹோ என்றிருக்கும். ஆனால் அச்சில் அல்ல!” என பதில் கூறியிருந்தார்.

ஏறத்தாழ எல்லா அனைத்துலக நாளிதழ்களும், தற்போது தங்களின் செய்திகளை குறுஞ்செயலிகள் எனப்படும் ‘மொபைல் எப்ஸ்’ (Mobile apps) என்ற தளங்களின் வழி செல்பேசிகளில் வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் மலேசியாவில் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளில் குறுஞ்செயலி தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே ஊடகம் ‘செல்லியல்’ என்பதும், உலக அளவில் ஆயிரக்கணக்கான வாசகர்களை அது ஈர்த்துள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததுதான்!

தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது

Thanthi TV-logoமாறி வரும் தொழில்நுட்ப யுகத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால், சமீப காலத்தில், தொலைக்காட்சிகள் புதிய தொழில் நுட்பங்களின் மூலம் தொடர்ந்து செய்தித் துறையில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றன – விரிவாக்கி வருகின்றன – என்பதுதான்!

செய்திகளை உடனுக்குடன் வழங்குவது, உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகள், மற்றும் இணையம், கம்பித் தொடர்புகள், துணைக்கோளங்கள் வழியான சேவைகள் ஆகியவற்றின் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகள் தொடர்ந்து செய்தித் துறையில் தங்களின் முக்கியத்துவத்தையும், ஆதிக்கத்தையும் நிலை நாட்டிவருகின்றன.

பெரும் முதலீட்டில் தொலைக்காட்சி நிறுவனங்கள் இயங்குவதால், அவற்றின் விளம்பர வருமானமும் பெருமளவில் இருப்பதால், அந்த நிறுவனங்கள் மிக சுலபமாக உடனுக்குடன் மில்லியன் கணக்கில் செலவழித்து தங்களின் தொழில் நுட்ப வளமைகளை அதிகரித்துக் கொள்கின்றன.

குறிப்பாக, சிஎன்என் போன்ற அனைத்துல தொலைக்காட்சி அலைவரிசைகள் குறுஞ்செயலிகள் மூலம் தங்களின் இரசிகர்களின் எண்ணிக்கையையும், பரப்புகளையும் பெருமளவில் விரிவாக்கி விட்டன.

குறுஞ் செயலிகளில் போட்டி போடும் இந்தியத் தொலைக்காட்சிகள்

times-now-appஇந்தியாவின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “டைம்ஸ் நௌ” போன்றவையோடு தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளாக தந்தி டிவி, நியூஸ் 7, புதிய தலைமுறை, ஜெயா டிவி என முக்கிய செய்தித் தொலைக்காட்சிகளும் தற்போது குறுஞ்செயலிகளில் இயங்கி வருகின்றன.

இதன்மூலம், தொலைக்காட்சி இல்லாமல் ஒருவரின் செல்பேசிக்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள், தங்களின் செய்திகளைக் கொண்டு போய் சேர்க்க முடியும் என்ற புதுமையான, புரட்சியான தொழில்நுட்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. தேவை என்னவென்றால் கையில் ஒரு செல்பேசி, மற்றும் இணையத் தொடர்பு – அவ்வளவுதான்!

இதனால் தொடர்ந்து வணிகம், விளம்பரங்கள், போன்ற அம்சங்களில் ஏற்படப் போகும் எண்ணிலடங்கா மாற்றங்கள் – அந்த மாற்றங்களின் தாக்கங்கள் -இனிமேல்தான் கட்டம் கட்டமாக வெளிப்படத் தொடங்கும்.

இனி அனைத்தும் ஒரே தளத்தில்…

இந்த மாற்றங்களின் அடிப்படை என்னவென்றால் தற்போது, அச்சு, இணையம், தொலைக்காட்சி, வானொலி, குறுஞ்செயலி, என பல முனைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தகவல் ஊடகங்கள் அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வந்து, ஒரே தளமாக இயங்க வைக்க முடியுமா – அதனால் வணிக வாய்ப்புகளை அதிகரிக்க முடியுமா – என்ற வணிக நோக்கம்தான்!

இன்றைய தொழில்நுட்பத்தில் அவ்வாறு செய்ய முடியும், அதற்கேற்ற சரியான தளம் “குறுஞ்செயலி” என்ற மொபைல் எப்ஸ் – என்பதுதான் கிடைத்திருக்கும் விடை!

கையடக்கக் கருவிகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Selliyal Logo 440 x 215

கையடக்கக் கருவிகளில் ஏதாவது செய்திகளைப் படிப்பவர்கள் 2013-இல் 54 சதவீதமாக இருந்தார்கள். ஆனால் இந்த சதவீதம் 2016-இல் 72 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் 36 சதவீதத்தினர் செய்திகளை நாங்கள் அடிக்கடி திறன்பேசிகள் (ஸ்மார்ட்போன்) வழி பெறுகிறோம் என்று கூறியிருக்கின்றார்கள்.

செய்திகளை நாடி வாசகர்கள் தேடிச் செல்லும் காலம் மாறிவிட்டது. மாறாக, வாசகர்களை நோக்கி செய்திகளைத் “தள்ளிவிடும்” நடைமுறை (Push technology) – அதாவது முக்கிய செய்திகளை குறுஞ்செய்தி வடிவில் அவர்களின் செல்பேசிகளுக்கும் வலியச்சென்று புகுத்தி அவர்களைப் படிக்க வைக்கும் நடைமுறை இப்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

செல்லியல் ஊடகத்திலும் இந்த நவீன நடைமுறை பின்பற்றப்படுகின்றது.

திறன்பேசிகளின் வழி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

Newspapers-sliderநவீன சிந்தனைகளைக் கொண்ட இளைய சமுதாயத்தினர் இன்றைய அச்சுப் பத்திரிக்கைகளோடு தொடர்புப் படுத்திக் கொள்ள முடிவதில்லை  என்பதால் தொடர்ந்து அவர்கள் மின்னியல் மற்றும் இணையத்தள செய்தித் தளங்களை நாடும் போக்கு அதிகரித்துவருகின்றது. இதன் காரணமாக, அச்சுப் பத்திரிக்கைகளின் எதிர்கால வளர்ச்சி என்பது மிகுந்த சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று ஆய்வுகள் கணித்துள்ளன.

3 ஆண்டுகளுக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, இளைய தலைமுறையினரில் 27 சதவீதத்தினர் அச்சுப் பத்திரிக்கைகளின் வழி தங்களின் செய்திகளைப் பெற்றனர் – ஆனால் தற்போது வெறும் 20 சதவிகிதத்தினர் மட்டுமே அவ்வாறு பெறுகின்றனர் என்பதும் அமெரிக்க ஆய்வின் மற்றொரு கண்டுபிடிப்பு.

18-க்கும் 29-க்கும் இடைப்பட்ட வயதினரில், வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே அடிக்கடி அச்சுப் பத்திரிக்கைகளைப் படிக்கின்றனர் – ஆனால், 65 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 48 சதவிகிதத்தினர் அச்சுப் பத்திரிக்கைகளை நாடுகின்றனர்.

ஆனால், அச்சில் வெளிவரும் அந்தப் பத்திரிக்கைகளைக் கையில் தொட விரும்பாத இளைய வயதினர் அதே பத்திரிக்கைகளின் இணையத் தள செய்திகளை அதிக ஆர்வத்துடன் படிக்கின்றனர்.

அமெரிக்கர்களில் 81 சதவிகிதத்தினர் ஏதாவது செய்திகளை இணையத் தளங்கள், குறுஞ்செயலிகள், சமூக வலைத் தளங்கள் போன்றவற்றின் வழியாகப் பெற்று வருகின்றனர்.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இளைய சமுதாயத்தினரின் தொலைக்காட்சி மோகம் குறைந்தபாடில்லை. அவர்களில் 57 சதவிகிதத்தினர் தொலைக்காட்சி சார்ந்த செய்திகளைத் தெரிந்து கொள்கின்றனர்.

முகநூல் – டுவிட்டர் ஆதிக்கம்

facebook-and-twitterசமூக வலைத் தளங்களான முகநூல் (பேஸ்புக்) மற்றும் டுவிட்டர் ஆகியவையும் செய்திகளுக்கான முக்கியக் களங்களாக மாறிவருகின்றன. 26 சதவிகிதத்தினர் செய்திகளைப் படிப்பதற்காக சமூகவலைத் தளங்களை நாடுகின்றனர் என்பது ஆய்வின் மற்றொரு புள்ளிவிவரம்.

தொலைக்காட்சி என்றொரு சாதனமே தேவையில்லாமல், இனி தொலைக்காட்சி அலைவரிசைகளை செல்பேசிகளில் பார்க்கலாம் என்ற தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் –

அச்சு வழிச் செய்திகள், இணையத் தள செய்திகள், தொலைக்காட்சி, வானொலி, என ஊடகத்தின் அத்தனை கூறுகளையும் ஒரே நேர்க் கோட்டில் கொண்டு வந்து, மொபைல் எப்ஸ் எனப்படும் குறுஞ்செயலி தளத்திற்குள் – அடக்கி விடும் முனைப்பில் செயல்படும் தொலைக்காட்சி நிறுவனங்களின் வணிக நோக்கங்கள் –

இவற்றுக்கிடையில்,

அச்சுப் பத்திரிக்கைகள் மற்றும் மற்ற தகவல் ஊடகங்கள் எவ்வாறு இந்த சவால்களை எதிர்கொள்ளப் போகின்றன என்பதுதான் அனைவரும் எதிர்பார்த்திருக்கும் கேள்வி!

-இரா.முத்தரசன்