Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: தொடரி – நீண்ட பயணத்தில் ஆங்காங்கே மட்டுமே விறுவிறுப்பு!

திரைவிமர்சனம்: தொடரி – நீண்ட பயணத்தில் ஆங்காங்கே மட்டுமே விறுவிறுப்பு!

963
0
SHARE
Ad

thodari-7கோலாலம்பூர் – பிரபு சாலமனுடன் தனுஷ் கூட்டணி.. கீர்த்தி சுரேஸ் கதாநாயகி.. அதுவும் ஓடுற இரயிலில் காதல்.. ப்பா.. எப்படி இருக்கும்? என்ற பரபரப்பான மனநிலையோடு படத்தில் உட்காருகிறோம். எப்போதுமே பிரபு சாலமன் படத்தில் வரும் காதல், அதன் அறிமுகத்திலேயே நெஞ்சைத் தொட்டுவிடும்.

மைனா, கும்கி, கயல் என முந்தைய படங்கள் எதை எடுத்துக் கொண்டாலும், கதாநாயகி அறிமுகமாகி காதலில் விழும் போது நம்மையறியாமல் நாமும் அதில் விழுந்துவிடுவோம்.  ஆனால், தொடரியில், படம் தொடங்கி அரை மணி நேரத்திலேயே தனுஷ் வந்துவிடுகிறார், கதாநாயகியையும் பார்த்துவிடுகிறார் ஆனால் அந்த காதல் மட்டும் ஏனோ வரவுமில்லை.. ஈர்க்கவுமில்லை.. அங்கேயே ஏமாற்றம் வந்து நெஞ்சைக் கவ்விக் கொள்கிறது.

சரி.. பொறுத்திருந்து பார்ப்போம் என்று பயணிக்கையில், இடைவேளைக்குப் பின்பு தான் இரயில் மெல்ல வேகம் எடுக்கிறது. அதுவரை காமெடி என்ற பெயரில் கட்லட்டையும், தக்காளி சூப்பையும் காட்டி, கேண்டீனிலேயே வைத்து நம்மை வறுத்தெடுத்துவிடுகிறார்கள்.

#TamilSchoolmychoice

இடைவேளைக்குப் பின்பாக, நடக்கும் சம்பவங்களில் எதிர்பார்த்த பரபரப்பு தொற்றிக் கொள்ள, படுவேகமாகச் செல்லும் இரயிலோடு நாமும் படபடத்துக் கொண்டிருக்கையில், அங்கேயும் பல முட்டுக்களை வைத்து ரசிகர்களை டீ குடிக்க வெளியே அனுப்பிவிடுகிறார் இயக்குநர்.

ஒருவழியாக, இரயில் பயணம் முடிந்து வெளியே வருகையில், கொஞ்சம் காற்று வாங்குவோம் என்பதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.

கதை

thodari5டெல்லியிலிருந்து சென்னை வரும் இரயிலில் தம்பி இராமையா நடத்தும் கேண்டீனில் வேலை செய்கிறார் பூச்சியப்பன் (தனுஷ்). கொஞ்சம் துடுக்காக, திறமையாகப் பேசுவதால், அதே இரயிலில் பயணிக்கும் மத்திய மந்திரி ராதாரவிக்கும், பிரபல நடிகை ஸ்ரீஷாவிற்கும் நேரத்திற்கு உணவு கொடுக்கும் பொறுப்பை பெறுகின்றார். ஸ்ரீஷாவிற்கு உணவு கொடுக்கப் போய், அவரது உதவியாளர் கீர்த்தி சுரேசிடம் காதலில் விழுவதோடு, ராதாரவிக்கு உணவு கொடுக்கப் போய் அவரது பாதுகாவலர் ஹரிஸ் உத்தமனிடம் உரண்டை இழுத்துவிடுகிறார்.

ஓடும் இரயிலில் காதலையும், எதிரியையும் சமாளித்துக் கொண்டிருக்கையில், ஒரு சம்பவத்தால், அந்த இரயில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, படுவேகத்தில் பாய்கிறது.

இரயிலில் உள்ள 800 பயணிகளைக் காப்பாற்ற ஒட்டுமொத்த போலீசும் போராடிக் கொண்டிருக்க, எஞ்சின் கதவருகே சிக்கிக் கொண்ட தனது காதலியைக் காப்பாற்றப் போராடுகிறார் தனுஷ்.

இரயில் நின்றதா? காதல் வென்றதா? என்பதே கிளைமாக்ஸ்.

நடிப்பு

தனுஷ்.. இரண்டாவது முறையாக டீ கேனைத் தூக்கியிருக்கிறார். எளிமையான நடிப்பைக் கொடுத்து தான் எப்போதுமே இயக்குநருக்கு ஏற்ற நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

கீர்த்தி சுரேசை மேக்கப் இல்லாமல் நடிக்க வைத்திருக்கிறார்கள். குழந்தைத்தனமான நடிப்பில் சில நேரங்களில் ஈர்க்கிறார். சில நேரங்களில் நடிப்பு செயற்கையாகத் தெரிகின்றது.

thodaபடத்தில் சுவாரசியத்தைக் கூட்ட, ராதாரவி, ஹரிஸ் உத்தமன், சின்னி ஜெயந்த், போஸ் வெங்கட், படவா கோபி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பட்டிமன்றம் புகழ் ராஜா, கணேஷ் வெங்கட்ராம், இயக்குநர் வெங்கடேஸ் எனப் பல நட்சத்திரங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாம் தெரிந்த முகங்களாக வைத்திருப்பது சரியாக வேலை செய்திருக்கிறது.

இவர்களோடு, நகைச்சுவைக்காக தம்பி இராமையா, கருணாகரன், இமான் அண்ணாச்சி, தர்புகா சிவா என ஒரு பெரிய பட்டாளமே இருக்கின்றது.

ரசிக்க 

வழக்கமாக பிரபு சாலமன் படத்தில் வரும் ஜனரஞ்சகமான காட்சியமைப்புகளும், வசனங்களும் தொடரியிலும் இடம் பெற்று ரசிக்க வைக்கின்றன.

எப்படியாவது பாடகியாகிவிட வேண்டும், விமானத்தில் போக வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டிருக்கும் டச்சப் கேர்ள் கதாநாயகி, விமானத்தில் போக முடியாமல் வேண்டா வெறுப்பாக இரயிலில் செல்லும் மத்திய அமைச்சர், வேலை நேரத்தில் கூட போனில் பொண்டாட்டியுடன் சண்டையிட்டுக் கொண்டேயிருக்கும் இரயில் ஓட்டுநரின் உதவியாளர், ஓய்வு பெறப் போகும் கடைசி நாள் பயணத்தில் நடக்கும் அசம்பாவிதங்களால் உயிரை விடும் இரயில் ஓட்டுநர், இரயில் கொள்ளையர்கள், டிஆர்பி ரேட்டிங்கை ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் முழுமையாகத் தெரியாத பிரச்சினையை விவாத மேடை என்ற பெயரில் ஊதிப் பெரிதாக்கும் ஊடகங்கள் என காலத்திற்கு ஏற்ற பல விசயங்களைக் காட்சிகளாக்கியிருப்பது பெரிதும் ஈர்க்கின்றது.

keerthyடி.இமானின் பின்னணி இசையும், பாடல்களும் கேட்கும் இரகம்.. ‘போன உசிரு’ பாடல் சட்டென மனதில் தங்கி விடுகின்றது.

வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவில் இரயில் காட்சிகள் பிரம்மாண்டம்.

சலிப்பு

படத்தின் சுவாரசியமே அந்த இரயில் சம்பவம் தான் என்றான போது, அதில் நம்ப முடியாத பல ஹீரோயிசங்களை புகுத்தி, நாடகத்தனமாக்கியிருப்பது ரசிக்க முடியவில்லை.

150 கிலோமீட்டர் வேகத்தில் இரயில் போய் கொண்டிருக்கும் போது, கதாநாயகன் சர்வசாதாரணமாக மேலே ஏறி சண்டை போடுகிறார், பாட்டு பாடுகிறார், நடனம் ஆடுகிறார்.. படம் பார்க்கிறவர்களெல்லாம் முன்னப்பின்ன இரயிலில் போனதே இல்லை என்று நினைத்துவிட்டாரோ இயக்குநர்?

thodari1அதையாவது பொறுத்துக் கொள்ளலாம் போல, தறிகெட்டு ஓடும் இரயிலுக்கு இணையாக, மீடியா வாகனம் ஒன்று நேரலையாகப் படம் பிடித்துக் கொண்டே வருகிறதாம்.. இரயிலின் உள்ளே உயிரைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு இருக்க வேண்டிய பயணிகள், நேரலை நிகழ்ச்சியைப் பார்த்து, “பூச்சி.. சரோஜா காதல் சேருமா?” என்று எதிர்பார்க்கிறார்களாம்.

இப்படியாக, விறுவிறுப்பாகச் செல்ல வேண்டிய படத்தை, பல நாடகத்தனமான காட்சிகள் அதன் வேகத்தைக் குறைத்து சலிப்பை ஏற்படுத்துகின்றன.

மொத்தத்தில், தொடரி – நீண்ட பயணத்தில் ஆங்காங்கே மட்டுமே விறுவிறுப்பு!

-ஃபீனிக்ஸ்தாசன்