நியூயார்க் – நியூயார்க் நகரில் செல்சி என்ற இடத்தில் அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிப்படையவில்லை என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை 29 பேர் காயமடைந்துள்ள இந்த சம்பவத்திற்கான பின்னணிக் காரணங்களை காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். வேண்டுமென்றே இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது என்றாலும், இதுவரை பயங்கரவாதத் தொடர்பு எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தற்போது நியூயார்க்கில் ஐக்கிய நாட்டு சபையின் 71-வது பொதுப் பேரவை நடைபெற்று வரும் சூழலில் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதால் நிலைமை மேலும் பரபரப்பாகியுள்ளது.
நியூயார்க்கில் சாஹிட் ஹாமிடி
இந்தப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ளும் மலேசியக் குழுவுக்கு துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹாமிடி தலைமையேற்று நியூயார்க் சென்று சேர்ந்துள்ளார். அவர் நியூயார்க் சென்று சேர்ந்த ஒரு மணி நேரத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், சம்பவம் நடந்த இடத்திலிருந்து 40 கட்டிடங்கள் தள்ளி, சாஹிட் தங்கியுள்ள தங்கும் விடுதி அமைந்திருக்கின்றது என்றும் பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் இருந்து பல நாட்டுத் தலைவர்களும் பேராளர்களும் ஐநா பொதுப் பேரவையில் கலந்து கொள்வதற்காக தற்போது நியூயார்க்கில் குழுமியுள்ளனர்.
மலேசியர்கள் யாரும் பாதிப்படையவில்லை என்றாலும், வெளியுறவு அமைச்சு தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வரும்.
உதவி தேவைப்படும் மலேசியர்கள் நியூயார்க்கிலுள்ள மலேசியத் துணைத் தூதரகத்தை பின்வரும் தொலைபேசியிலும், இணைய அஞ்சல் வழியும் தொடர்பு கொள்ளலாம்.