சென்னை – கடந்த ஜூலை மாதத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர், ஒரு நாயை மாடியிலிருந்து தூக்கி வீசும் காட்சியை படமாக எடுத்து முகநூல் பக்கத்தில் போட, அந்தக் காட்சி உலக அளவில் ஆழ்ந்த பரிதாபத்தையும், பலத்த கண்டனங்களையும் ஈர்த்ததை பலர் மறந்திருக்க மாட்டார்கள்.
இதற்கிடையில் தூக்கி வீசப்பட்ட நாயைக் கண்டெடுத்து அதற்கு முறையான சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய ஷரவான் கிருஷ்ணன் என்ற விலங்குநல ஆர்வலரும் அவரது நண்பர்களும், அதற்கு ‘பத்ரா’ எனப் பெயரிட்டார்கள். இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ்பெற்று விட்ட பத்ரா தற்போது முற்றாக குணமாகிவிட்டது என்பதோடு கார்த்திக் தண்டபாணி என்பவர் அதனை நிரந்தரமாகத் தத்தெடுத்துள்ளார்.
குணமடைந்து தத்தெடுக்கப்பட்ட பத்ராவுடன் கார்த்திக் தண்டபாணி
கார்த்திக் பத்ராவைக் காப்பாற்றிய பின்னர் அதற்குரிய தேவைகளை நிறைவேற்றியதோடு, தற்காலிகமாக பராமரித்து வந்தார். தற்போது நிரந்தரமாக பத்ராவை வைத்துக் கொள்ள முடிவு செய்து விட்டார்.
நாயை மாடியில் இருந்து தூக்கி எறிந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் அபராதம்!
இதற்கிடையில் பத்ராவை மாடியில் இருந்து வீசிய அந்த பாதகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்கள் என்பதையும் வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
நாயைத் தூக்கி வீசியவர் சென்னையில் படிக்கும் மாணவரான கவுதம் சுதர்சன் என்பதும், இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. நாயைத் தூக்கி வீசும் காட்சியை செல்பேசியில் காணொளியாகப் படம் பிடித்தவர் ஆசீஸ்பால் என்பதையும் காவல் துறையினர் கண்டுபிடித்து பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
அவர்கள் இருவரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்கள் ஆவர். கல்லூரி நிர்வாகமும் அவர்களின் இந்தச் செயலுக்காக அவர்களை இடைநீக்கம் செய்தது.
அண்மையில் இவர்களின் வழக்கை விசாரித்த ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் அவர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருக்கின்றது.