சென்னை – கடந்த சில நாட்களாக இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கிலும் அனைவரின் கவனத்தையும், குறிப்பாக மிருகநல ஆர்வலர்களை ஈர்த்தது ‘பத்ரா’.
ஆம்! மேல்மாடியிலிருந்து, ஒரு மனித மிருகம் இந்த நாயைத் தூக்கி வீசும் அவலம் நிகழ, அது குறித்த விழிப்புணர்வை சமூக ஊடகங்களில் விரிவாக ஏற்படுத்தியதோடு, அந்த நாயை தேடிச் சென்று கண்டுபிடித்து, அதற்கு உரிய சிகிச்சையை வழங்கும் ஏற்பாடுகளையும் செய்தனர் ஷரவான் கிருஷ்ணன் என்ற மிருக நல ஆர்வலரும் அவரது நண்பர் குழாமும்!
பத்ராவுடன்- ஷரவான் கிருஷ்ணன்…(படம்: நன்றி – ஷரவான் கிருஷ்ணன் முகநூல் பக்கம்)
தான் சிகிச்சை அளித்த அந்த நாய்க்கு ‘பத்ரா’ என்று பெயரும் சூட்டியிருந்தார் ஷரவான் கிருஷ்ணன். தான் அந்த நாயுடன் இருக்கும் படம் ஒன்றை தனது முக நூலில் வெளியிட்டிருக்கின்றார்.
கணினி முன் அமர்ந்து தன்னைப் பற்றிய புகைப்படங்களை – செய்திளை பத்ரா அந்தப் படத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறது.
“என்னைப் பற்றி இத்தனை செய்திகளா? எனக்காக இத்தனை குரல்களா? என்னைத் தூக்கிய வீசிய கொடூரனும் ஒரு மனிதன் என்றால், என்மீது அனுதாபம் காட்டவும் இத்தனை மனிதர்களா?” என பத்ரா கேட்பது போல் அமைந்திருக்கின்றது மேலே காணும் அந்தப் புகைப்படம்.