ஜோர்ஜ்டவுன் – அண்மையில் காலமான பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் ஹருண் டின் மரணம் குறித்துது டுவிட்டரில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக, நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இங்குள்ள காவல் நிலையம் வந்த ஜசெகவைச் சேர்ந்த பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெஃப் ஊய் (படம்), விசாரணைக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
ஏறத்தாழ 4 மணி நேரம் அவர் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்.
ஊய்யின் வழக்கறிஞர் ஆர்எஸ்என் ராயர் காவல் நிலையத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, காவல் துறையினருக்கு தாங்கள் போதிய ஒத்துழைப்பு வழங்கியதாகவும், காவல் துறையினரும் தங்களை நல்ல முறையில் விசாரணை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
காவல் துறை பிணையில் (ஜாமீன்) ஜெஃப் ஊய் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மதங்களுக்கு எதிராக தொடர்பு ஊடகங்களைப் பயன்படுத்தி கருத்து கூறியதற்காக, தொடர்பு மற்றும் பல்ஊடக சட்டத்தின் கீழ் ஜெஃப் ஊய் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
ஜெஃப் ஊய் மீதான விசாரணையைக் காவல் துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.