புதுடில்லி – எதிர்வரும் செப்டம்பர் 27-ஆம் தேதிவரை ஒவ்வொரு நாளும் 6,000 கன அடி காவேரி நதி நீரை கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கி வர வேண்டும் என இன்று செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக காவிரி மேலாண்மைக் குழு, தினசரி 3,000 கன அடி நீரை கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என விடுத்திருந்த உத்தரவை மாற்றி, அதனை 6,000 கன அடி நீராக உச்ச நீதிமன்றம் உயர்த்தியுள்ளது.
மத்திய அரசாங்கம் அடுத்த நான்கு வாரங்களுக்குள் காவேரி மேலாண்மை வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும் தலைவர்களும் வரவேற்றுள்ளதோடு, இது வரலாற்று பூர்வ தீர்ப்பு என்றும் அவர்கள் வர்ணித்துள்ளனர்.
தீர்ப்புக்கு ஏற்ப உடனடியாக காவேரி நிர்வாக வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும் தமிழகத் தரப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.