மணிலா – சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் விமானி தவறுதலாக, ‘அவசர எச்சரிக்கையை’ அழுத்தியதால், அவ்விமானம் கடத்தப்பட்டதாக அஞ்சி, மணிலாவிலுள்ள நினோய் அகினோ அனைத்துலக விமான நிலையத்தில் அவ்விமானம் தரையிறங்கும் போது, மிகப் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இன்று செவ்வாய்க்கிழமை மதியம், ஜெட்டாவிலிருந்து மணிலா விமான நிலையத்திற்கு அவ்விமானம் வந்திறங்கிய போது, காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் அதனைச் சுற்றிவளைத்தனர்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் அவ்விமானம் தனித்து நிற்க வைக்கப்பட்டதோடு, அதிலிருந்து பயணிகளும் விமானத்தின் உள்ளேயே அமர வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில், விமானத்திற்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்பது உறுதியான நிலையில், பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மணிலா காவல்துறைத் தலைவர் ஆஸ்கார் அல்பாயால்டே கூறுகையில், “நிலைமை தற்போது இயல்பாக உள்ளது. தவறுதலாக விமானி அவசர விளக்கை அழுத்தியதாகக் நம்பப்படுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.
மணிலாவில் விமானம் தரையிறங்க 32 கிலோமீட்டர் தூரம் இருந்த போது, விமானத்திற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக விமானியிடமிருந்து எச்சரிக்கை வந்ததையடுத்து, உடனடியாக விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக நினோய் அகினோ விமான நிலையத்தின் பேச்சாளர் அறிக்கை விடுத்துள்ளார்.