கோலாலம்பூர் – இந்தோனிசியப் புகைமூட்டத்தினால் கடந்த ஆண்டு இந்தோனிசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து ஹார்வர்டு மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை மலேசியா மறுத்துள்ளது.
அந்த ஆய்வு முடிவுகளின் படி, மொத்தம் 100,300 அகால மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகவும், அதில் இந்தோனிசியாவில் 91,600 பேரும், மலேசியாவில் 6,500 பேரும், சிங்கப்பூரில் 2,200 பேரும் மரணமடைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் கூறும் எண்ணிக்கையும், அதிகாரப்பூர்வ எண்ணிக்கையும் முற்றிலும் மாறுபட்டு உள்ளது. காரணம், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள எண்ணிக்கையின் படி, இந்தோனிசியாவில் 19 பேரும், மலேசியா, சிங்கப்பூரில் இறப்பு எதுவும் இல்லை என்றும் தகவல் கூறுகின்றது.
இந்நிலையில், இது குறித்து மலேசிய துணை சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் எஸ்.ஜெயேந்திரன் கூறுகையில், “அப்படி ஒன்றும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
“கடந்த ஆண்டு புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவங்கள் எதுவும் இங்கு பதிவாகவில்லை” என்றும் ஜெயேந்திரன் கூறியுள்ளார்.